முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இன்றைய நவீன டிஜிட்டல் பெரும்பாய்ச்சலுக்கு அன்றே தொலைநோக்குப் பார்வையுடன் வித்திட்டவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனைகளையும் திட்டங்களையும் இன்றைய இளம் தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், தி.மு.க தொண்டர்கள் அனைவரும் எக்ஸ், யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலும் அது குறித்த காணொலிகளை அதிகளவில் பகிர்ந்து, மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

