வீரர்கள் நேரடியாக சந்திக்கலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வரும் சூழலில், ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்கான பிரத்யேகச் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இலக்கினை அடையும் வகையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனது அலுவலகப் பணிகளை நாள்தோறும் காலை 7 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்க முடிவு செய்துள்ளார்.
விளையாட்டுத் துறை உயர் அலுவலர்கள், வீரர்கள் மற்றும் விளையாட்டுச் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டுத் துறை தொடர்பாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுச் சங்க நிர்வாகிகள் எவ்வித சிரமமுமின்றி எளிதாகத் தன்னை அணுகித் தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.

