Monday, June 1, 2026
Homeசெய்திகள்பள்ளிகள் திறக்கிறது... ஆனால் ஆசிரியர்கள் எங்கே? புதிய அரசுக்கு அன்புமணி கேள்வி !

பள்ளிகள் திறக்கிறது… ஆனால் ஆசிரியர்கள் எங்கே? புதிய அரசுக்கு அன்புமணி கேள்வி !

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததும், 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாகக் கிடப்பதும் பள்ளிக்கல்வித்துறையின் பலவீனமான அவலநிலையைக் காட்டுவதாகப் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த மே 31-ஆம் தேதியன்று ஒரே நாளில் மட்டும் 30 தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், 3 முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் 700, மேல்நிலைப் பள்ளிகளில் 300, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 800 என மொத்தம் 1800-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும் மனிதவளத்தையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டியே 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் தவிர்க்கப்பட்டு வந்ததாகவும் சாடியுள்ள அவர், இந்த வழக்குகளில் பெரும்பாலானவை கடந்த கால ஆட்சியாளர்களின் தூண்டுதலாலேயே தொடரப்பட்டவை என்ற வேதனைக்குரிய உண்மையையும் உடைத்துள்ளார்.

பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் முக்கியப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது கல்வித்தர வீழ்ச்சிக்கும் மாணவர் சேர்க்கை குறைவதற்கும் வழிவகுக்கும் என்பதால், “சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு இந்த அவலநிலைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்றும், நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்து ஒற்றை அரசாணை மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களையும், கல்வி மாவட்டங்களுக்குத் தேவையான அதிகாரிகளையும் போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments