தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமீயப் பொருளாதாரப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி தெரிவித்தார்.
விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி, இயக்குனர் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

