Thursday, July 9, 2026
Homeசெய்திகள்காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகம்… தமிழ்நாடு அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகம்… தமிழ்நாடு அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்றும், தண்ணீர் வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது நம் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகத் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் கடந்த 5 ஆண்டுகள் முழுவதும் சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று தாம் சட்டமன்றத்தில் வலியுறுத்தியிருந்ததையும், ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்துப் பேசியிருந்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகம் தர மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப் பெற வேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments