Saturday, March 14, 2026
HomeUncategorizedதயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

இவ்விழாவினில் வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது… 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 வருடங்கள் இருக்கும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் பேரன்போடு வரவேற்கிறேன். இன்றைய விழாவில் நம் சங்கத்திற்காக உழைத்த மூத்த உறுப்பினர்களை ஆயுட்கால உறுப்பினராக அங்கீகரித்து அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு வரச் சம்மதித்து எங்களை வாழ்த்திட்ட செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

தயாரிப்பாளர் ஃபைஸ்டார் கதிரேசன் பேசியதாவது.. 
இந்த விழாவானது நமது குடும்ப விழா போல் நடக்கிறது. நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்கள் கூறும் அறிவுரையுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது.. 
இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நம் சங்கத்தில் மிக குறைந்த தயாரிப்பாளர்களே நிறைய படங்கள் செய்து வருகிறார்கள் மீதமுள்ளவர்கள் கஷ்டப்பட்டுகொண்டிருக்கிறார்கள். இதை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 

நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது… 
என் குடும்பத்தைச் சேர்ந்த சாமிநாதன் அவர்கள் இவ்விழாவிற்கு வந்தது எனக்கு ஆச்சரியமில்லை. இந்த அரசே திரைத்துறைக்குச் சாதகமான அரசு. அவர்கள் சினிமாவுக்கு நல்லது செய்கிறார்கள்.  இந்த இடத்தில் சான்றிதழ் பெறும் அனைவரின் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… நன்றி.  

தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் பேசியதாவது..
 கொரோனா காலத்தை தாண்டி தமிழ் சினிமா எழுச்சி பெற்றதென்றால் அது தேனாண்டாள் முரளி அவர்களால் தான். பல நடவடிக்கைகள் எடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொற்காலமாக இந்த காலத்தை மாற்றியுள்ளார். அரசும் தயாரிப்பாளர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 

தயாரிப்பாளர் காட்ரக்கடா பிரசாத் பேசியதாவது.. 
இந்த கமிட்டி எந்த நிதியும் இல்லாமல் தான் தனது பணியை துவங்கினார்கள். முன்பு இருந்தவர்கள் பேங்க் பேலன்ஸை, கஜானாவை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். இவர்கள் வந்த பிறகு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு பொங்கல், தீபாவளி பரிசு தருமளவு மாற்றியிருக்கின்றனர். இவர்கள் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. மீண்டும் தேர்தல் நடந்தால் , 10 லட்சம் வரை செலவாகும் அதை தவிர்த்து இவர்களே தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது… 
எங்கள் அழைப்பின் பேரில் வந்திருக்கும் அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி. 25 ஆண்டுகள் இருக்கும் உறுப்பினர்களை ஆயுட்கால உறுப்பினர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்பது  எங்கள் சங்கத்தில் எடுத்த சிறந்த முடிவு. முன்பு திரைத்துறை முழுமையாக தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது. அனைத்து முடிவும் தயாரிப்பாளர்கள் தான் எடுப்பார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. அதை மாற்ற வேண்டும். அதற்கு சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். அமைச்சர் நம் கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார். இந்த விழா மூத்த தயாரிப்பாளர்களை கௌரவிக்கும் விழா. அவர்களை நாம் மதித்து கௌரவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments