வைராக்கியம் மிகுந்த வீர உரைகளை இளைஞர்கள் மத்தியில், ஆழமாக வேரூன்றச் செய்து, அப்பழுக்கற்ற ஆன்மீகம், தீரம் மிகுந்த தேசபக்தி, தன்னிகரில்லா தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை போதித்து, ஒரு யுகத்திற்கான புரட்சியை தனது 39 வயதிற்குள் போதித்து, தானும் அவ்வாறே வாழ்ந்து, வழிகாட்டிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் அவதரித்த நன்னாள் ஜனவரி 12 . இதுவே இந்திய இளைஞர்களின் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் எழுச்சிமிகுந்த கருத்துக்கள் எக்காலத்தின் இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடியது. அவற்றில் சில:
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்..
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகைத் தூற்றாதே,
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

