Tuesday, March 10, 2026
HomeUncategorizedநடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

நடிகர் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.  அவருக்கு வயது 70. கரகாட்டக்காரன், சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர். குறிப்பாக அஜித் – ஹெச்.வினோத் கூட்டணியில் வந்த ‘நேர்கொண்ட பார்வை’யில், அஜித்துடன் இருக்கும் பெரியவரை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிடவும் முடியாது. மறந்துவிடவும் முடியாது. 

சாதாரணமான நடிகரில்லை அவர். நல்ல வாய்ப்பும் அருமையான கேரக்டரும் கொடுத்தால், வெளுத்துவாங்கிவிடுவார். அவர் பெயர் ரகு. ஆனால் அப்படிச்சொன்னால் தெரியாது. அவரின் அப்பா அசகாயசூரர். அந்தக் காலத்தில் மிகப்பெரிய நடிகர். சிவாஜி மாதிரியான நடிகர்களே அவர் நின்றால் மிக கவனமாக நடிப்பார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யாரைக் கொண்டு வேண்டுமானாலும் எடுக்கமுடியும். ஆனால் அவருடைய கதாபாத்திரத்தைச் செய்ய அவருக்கு இணையாக எவரும் இல்லை’ என்று இயக்குநர் ஸ்ரீதர் வியந்து சொல்லியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட நடிகர் ரகுவின் தந்தை… டி.எஸ்.பாலையா.

 ரகுவாக திரையுலகில் அறிமுகமாகி, அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தவர்… ஜூனியர் பாலையா.

சிவகுமார், கமல் நடித்து ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் இருந்து நடிக்கத் தொடங்கினார் ஜூனியர் பாலையா. கே.பாலாஜியின் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் உருவான ‘தியாகம்’ படத்தில் சிவாஜியுடன் பல காட்சிகளில் நடிச்சார். ’வாழ்வே மாயம்’ படத்தில் கமலின் நண்பர்களில் ஒருவராக நடிச்சார்.

சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அதில் தன் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியவருக்கு இயக்குநர் பிரியதர்ஷனின் ‘கோபுர வாசலிலே’ அட்டகாசமாக இன்னொரு கதவைத் திறந்தது. கார்த்திக், ஜனகராஜ், நாசர், சார்லியுடன் இணைந்து நண்பர்களில் ஒருவராக ஜூனியர் பாலையா நடித்து அசத்தினார். ‘தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது’ பாடலுக்கும் நட்பு சூழ வந்து மனதில் நின்றார்.(கட்டிங் கண்ணையா)

கங்கை அமரன் இயக்கத்தில் எவர்கிரீன் ஹிட்டடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தில், ராமராஜனின் கரகாட்டக் கோஷ்டியில் ஜுனியர் பாலையாவின் நடிப்பு தனித்துத் தெரிந்தது. நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், ‘சுந்தரகாண்டம்’ படத்தில் அட்டகாசமான கேரக்டரைக் கொடுத்தார். எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய கேரக்டர் அது. ‘சண்முகமணி’ ‘சண்முகமணி’ என்று பாக்யராஜை குறும்புடன் இவர் அழைக்கும்போதெல்லாம் தியேட்டர் வெடித்துச் சிரித்தது.

பிறகு பாக்யராஜ் தொடர்ந்து ஜூனியர் பாலையாவைப் பயன்படுத்திக் கொண்டார். ’அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’, ‘வீட்ல விசேஷங்க’ என்று நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. கொடுத்த கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வழங்கினார்.

’சாட்டை’ படத்திலும் நல்ல கேரக்டரில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமே என்று ரசிகர்களே நினைக்கும் அளவுக்கு சில நடிகர்கள் இருப்பார்கள். அப்படித்தான் ஜூனியர் பாலையாவையும் ரசிகர்கள் பார்த்தார்கள்

தனக்கு நடிப்பில் ஆர்வம் வந்தது? எப்படி என்பது பற்ரி ஒரு முறை கேட்ட போது, “எட்டாம் கிளாஸ் படிக்கும்போது மிமிக்ரி பண்ணிக் காட்டுவேன். அதில் அப்பாவின் குரலும் ஒன்று. இதைப் பார்த்த என் ஆசிரியர் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முக்கியமான காட்சிகளை நாடகமாகப் பள்ளி ஆண்டுவிழாவில் நடத்த முடிவுசெஞ்சார். நாகேஷ் கேரக்டரைச் சின்னம்மா பையன் செய்தார். சச்சு கேரக்டரை எனது தங்கை செய்தார். அப்பா கேரக்டரை நான் செஞ்சேன். பாராட்டென்றால் அப்படியொரு பாராட்டு. ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு போன்செய்து எனது அப்பாவிடம், “உங்களை அச்சு அசலாக அப்படியே உங்கள் பையன் நடித்துக் காட்டினான்” என்று சொல்ல அப்பாவுக்குப் பெருமை தாங்கலை.பிறகு, ‘நம்ம வீட்டுத் தெய்வம்’ என்ற படத்தில் அப்பா நடித்தபோது அவரது நடிப்புத்திறனை அணுஅணுவாக ரசிக்க ஆரம்பித்தேன். நானே அவரது தீவிர விசிறியாகவும் மாறினேன். நான் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு ஜூனியர் பாலையா என்று பெயர் சூட்டியதும் அவர்தான்.“அப்படீன்னார்

பெரும்பாலும் வில்லன் ரோலில் நடிக்க விரும்பாமல் ஒதுங்கி போனவர் இன்று காலமாகி விட்டார்.. அன்னாருக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் அஞ்சலி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments