செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வேலைகளைப் பறிக்கும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், ஏஐ ஏஜென்ட்டுகளே மனிதர்களை வேலைக்கு அமர்த்தும் ‘ரென்ட் ஏ ஹியூமன்’ (RentAHuman) எனும் புதிய ஸ்டார்ட்அப் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மென்பொருள்களால் செய்ய முடியாத நிஜ உலகப் பணிகளை (Physical tasks), அதாவது ஒரு பொருளை நேரில் சென்று டெலிவரி செய்வது, ஒரு இடத்தைப் புகைப்படம் எடுப்பது போன்ற வேலைகளைச் செய்து முடிக்க இந்தத் தளம் ஏஐ-க்களுக்கு மனிதர்களை வாடகைக்கு வழங்குகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தளத்தில் ஏற்கனவே லட்சக்கணக்கானோர் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
“ரோபோக்களுக்கு உங்கள் உடல் தேவை, ஏஐ-க்களால் புல்வெளியைத் தொட முடியாது, உங்களால் முடியும்” என்ற வாசகத்துடன் செயல்படும் இந்தத் தளம், ஏஐ-யால் வேலை இழந்தவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு வழியாகப் பார்க்கப்பட்டாலும், இயந்திரத்திடம் மனிதன் வேலை பார்க்கும் ஒரு விசித்திரமான சூழலையும் உருவாக்கியுள்ளது.
