ஆடி மாதம் என்றாலே எல்லாருக்கும் நினைவிற்கு வருவது அம்மன் கோவில் திருவிழாக்கள் தான். இந்தத் திருவிழாக்களில் அம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்வார்கள். அந்த மா விளக்கு எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்…
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – கால் கிலோ
வெல்லம் – 100 கிராம்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
பச்சை கற்பூரம் – சிறிதளவு.
செய்யும் முறை:
பச்சரிசி மாவு வைத்திருப்பவர்கள் சுலபமாக செய்யலாம். இல்லாதவர்கள் பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வெயிலில் அல்லது மின்விசிறி காற்றில் உலர வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை நன்கு சலித்து எடுக்க வேண்டும்.
கடைசியாக வரும் குருணையை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள். பச்சரிசி மாவுடன் வெல்லம் பாகு காய்ச்சி ஊற்றலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சேர்க்கலாம். அதன் பின் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளலாம்.
இவற்றைக் கட்டாயம் போட வேண்டும் என்பதில்லை. இதில் உங்களிடம் எது இருக்கிறதோ அதைப் போட்டால் போதுமானது. இதை சேர்த்தால் தெய்வீக வாசமாக இருக்கும். அதனால் தான் இதை சேர்க்கிறார்கள். எல்லாம் ஒன்றாக கலந்துவிட்டு தேவையான அளவிற்கு நெய் சேர்த்து உருண்டை பிடிக்க வேண்டும்.
உருண்டையாக இல்லாமல் ஒரு உருளையாக தட்டி வைத்துக் கொண்டால் தீபம் செய்வதற்கு வசதியாக இருக்கும். உருளை வடிவத்தில் கொண்டு வந்து பின் இரண்டாக ஆக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் மாவிளக்கு ஒற்றையில் போடக்கூடாது.
இரண்டு தீபங்கள் அல்லது நான்கு தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். ஏனென்றால் இதை நிவேதனமாக சாப்பிட இருப்பதால் வேறு எண்ணெய்களை உபயோகிக்கக்கூடாது. தனித்தனியாக இப்போது தீப வடிவில் மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்திக் கொள்ளுங்கள்.
சந்தான குங்குமம் இட்டு, அதில் நெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றுபவர்கள் அடியில் ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள்.
மாவிளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக நீங்குவதை நீங்களே உணரலாம். மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.
