”கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்ல
ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா?
தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா? இல்ல
புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?” என்கிற கருத்தாழம் மிகுந்த (?) ஒரு திரைப்பட பாடல் மக்களை வெகுவாகக் கவர்ந்தது 2003 ஆம் ஆண்டு!
அந்த பாடலை எழுதிய கவிஞர் சினேகனே மணமகளுக்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்ட பின்னர்தான் புள்ளகுட்டி பெற்றிருப்பதாக அறிந்தேன். சமீபத்தில் கூட தன் குழந்தைகளுக்கு தமிழ்க்கலாச்சார வழியில் மொட்டைபோட்டு காது குத்திய செய்திகள் வந்தன. இதைப்பார்த்த்தும் என் மனம் அந்த குழந்தைகளை வாழ்த்தியது. கூடவே சினேகனைப்பார்த்து “ஏன் சார் இப்படிப் பண்ணிட்டீங்களே சார்?” என்று கேட்கவும் தோன்றியது.
”இப்போது இது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா?” என கேட்கலாம். சமூகத்தின் ஆரோக்கியமான மனநிலை மீது அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு இது முக்கியமான விஷயம்தான். எப்படி?
இந்த சினேகன் தன்னை ஒரு திரைப்பட பாடலாசிரியராக நிலை நிறுத்திக்கொண்டவர். இடைக்காலத்தில் ஊர் ஊராகச் சென்று “தமிழ்க்கலாச்சாரத்தை ஆரிய மாயையிலிருந்து மீட்டெடுக்கிறேன்” என “டைனமிக் திருமணம்” என்கிற ஒன்றை நடத்துவதில் பங்களிப்பு செய்தவர்.
அது என்ன டைனமிக் திருமணம்?
சீர்திருத்த திருமணம் என்கிற பெயரில் மேடையிட்டு, தங்கள் புறம்போக்கு புத்தியில் உதிக்கும், கலாச்சாரத்திற்கு ஒவ்வாத, அமங்கலமான, அரசியல் ரீதியிலான கருத்தியல்களைத் திணிப்பார்களே.. அதன் நவீன வடிவம்தான் “டைனமிக் திருமணம்!”
மணமக்கள் கிட்டத்தட்ட கிறிஸ்தவ மணமக்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பர். மணமக்கள் மாலைகள் அணிந்து, பூச்செண்டுகளுடன் இருப்பார்கள். சுவிசேஷக்கூட்டங்களில் ஜெபம் செய்வதுபோல் அறிவிப்புகள் வெளியாகி, திருமணம் முடிந்ததாக அறிவிக்கப்படும். பிறகு? வாழ்த்த வந்தவர்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி, வயது வித்தியாசமின்றி மணமக்களை ஆரக்கட்டித்தழுவி, முத்தங்களைப் பரிமாறிய அதே சுவையுடன் உணவருந்தச் செல்வது. அவ்வளவுதான். இத்தகைய திருமணவிழாக்களுக்கு “விளம்பரத் தூதுவர்” போல செயல்பட்டவர்தான் சினேகன்.
சங்ககாலத்திலிருந்தே தமிழகத்தில் இப்படித்தான் திருமணம் நிகழந்தனவா? அதற்கு ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறாரா சினேகன்?
ஒருவேளை அப்படி நடந்திருந்தால் ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தல்லை கவிழ்ந்தார்” என பாடியிருப்பாரா? தன் மனைவியின் தோள்மீது கைபோட்டு போவதையே சாதனைபோல் நிகழ்த்திக் காட்டியிருப்பாரா? சரி. அதெல்லாம் போகட்டும்.
பிறர் குடும்பத்தில் இவர் நடத்திக்காட்டிய “டைனமிக் திருமணம்” போல் தன் திருமனத்தை நடத்திக்கொள்ளவில்லை?
பகுத்தறிவுப் புலியாக (?) அறியப்படும் நடிகர் கமலஹாசன் தலைமையில், அதிலும் குறிப்பாக அவர்”தாலி” எடுத்துக்கொடுக்க, அதை அணிவித்து மனைவியை ஏற்றுக்கொண்டது ஏன்?
திருமணம் முடிந்ததும் தன் மனைவியைக் கட்டிப்பிடித்து வாழ்த்துகள் கூற எத்தனை பேரை அனுமதித்தார்? குறைந்தபட்சம் கமலைக்கூட அவர் அனுமதித்ததாகத் தெரியவில்லை!
தமிழகத்தின் புரட்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போன்றோரின் மறுபக்கம் இதுதான்!
இதேபோல்தான் நெறிமீறி கள்ளக்காதல் என்பதை”திருமணம் கடந்த உறவு” என பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கும் சமாச்சாரமும்! அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அத்தகைய உறவுக்கு இட்டுச்செல்கிறார்களா? குறைந்தபட்சம் அனுமதியளிக்கிறார்களா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்!
இப்படி எழுதுவதால் அவர்கள் குடும்பத்தினரை கொச்சைப் படுத்துவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கலாச்சாரத்தை சீரழிக்கும் பாதைக்கு இட்டுச்செல்ல அவர்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம், கலாச்சாரத்தைக் காக்க விழையும் என்னைப் போன்றவர்களுக்கும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளவும்.
இதையெல்லாம் காலவிரையம் செய்து எழுதுவதற்குக் காரணமே, இப்படிப்பட்ட போலி புரட்சிவாதிகள் தங்களின் சொந்த அரிப்பு, அபிலாஷைகள், வயிற்றுப்பிழைப்புக்காக மண்ணின் கலாச்சாரத்தை குழிதோண்டும் விஷயங்களைச் செய்துவிட்டுப் போய்விடுவர். இவர்களைப் போன்றவர்களை தட்டிக்கேட்காவிட்டாலும், இவர்களின் உள்நோக்கமுடைய வக்கிர புத்திகளை சுட்டிக்காட்டுவது நன்னெறியாளர்களின் கடமை என்பதால்தான்.
”இந்த உலகம் கெட்டுப்போவதற்கு காரணம் கெட்டவர்களால் அல்ல. கெட்டது நடக்கும்போது அதை கண்டுகொள்ளாமல் போகும் நல்லவர்களால்தான்” என மாவீரன் நெப்போலியனின் கருத்தாக குறிப்பிடுவர். இதுவும் அதுபோல்தான். “அது அவன்பாடு” என போக முடியவில்லை.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பாட்டை சினேகன் எழுதியது 2002 –இல். பாடல் செமஹிட். ஆனால், அந்த பாடலைக்கேட்டு வளர்ந்த அன்றைய குழந்தைகள் (அதாவது இன்று திருமண வயதில் இருக்கும் இளைஞர், இளைஞியர்) கலாச்சாரத்தில் புரட்சி செய்துகொண்டிருக்கின்றனர் என்பது தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. ஆம்! பெரும்பாலும் திருமண பந்தத்திற்குள் ஆட்படாமல், ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் உடலியல் தேவைக்காக”சேர்ந்து வாழ்வது” என்னும் கலாச்சாரமான “லிவிங் டு கெதர்” வாழ்வியல் முறை. இது மிகவும் முற்றிப்போய் தற்கொலை, கொலை என அடுத்தகட்ட பரிணாமம் பெறுகிறது!
இணைந்து வாழும் வரை வாழ்வது.. கசந்தபின்னால் பிரிந்துவிடுவது.. அதன் பின் வேறுவேறு திருமணம் புரிந்துகொண்டு போவது.. அங்கும் கசந்து போனால்…
அட… ஏம்பா.. வளவளன்னு என்று கேட்கிறீர்களா? நியாயம் தான். என்னைப்போன்றவர்களின் கவலையெல்லாம் இப்படிப் பட்டவர்களால் பெற்றெடுக்கப்படும் அடுத்த தலைமுறையினரைப்பற்றித் தான். அடுத்த தலைமுறையினர் எத்தகைய மனநிலை, ஒழுக்க நிலையுடன் உருவாவார்கள்? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
ஐந்தறிவு ஜீவராசிகள் யாரும், யாரோடும் கட்டுப்பாடுகளற்ற நிலையில் புணர்ந்து, தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்வது.. தங்கள் குட்டிகளை ஒருகட்டத்தில் ”மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” என்று எண்ணி ”அம்போ” என விட்டுவிட்டுப்போவது என்றால், ஆற்றிவு கொண்ட மனித சமுதாயமும் அப்படி போகவேண்டுமென எதிர்பார்த்துதானா இந்த கும்பல் வேலை செய்கின்றன?
இப்படியே போனால் போலித்தனமாக குடும்ப வாழ்க்கை எதற்கு? குடும்ப அட்டை எதற்கு? சொத்து சேர்ப்பது எதற்கு? காமத்திற்காகத் தான் பந்தபாசமா?
“பாரதநாடு பழம்பெரும் நாடு.. நீரதன் புதல்வர்
இந்நினைவ கற்றாதீர்” என பாடல் பாடிய பாரதியை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
பாரத தேசமே பொய். ஆரிய மாயை, திராவிட சிந்தனை என்றெல்லாம் பேசிக்கொண்டே நெறிமுறைகளற்ற மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் தமிழினத்தை மூழ்கடிக்கும் சுயநல பிழைப்புவாதிகளை இன்றைய இளம் தம்பதியர் புறந்தள்ள வேண்டும். (இன்னொருபுறம் இன்றைய மேற்கத்திய கலாச்சாரமே நம் பண்பட்ட வாழ்வியல் முறையை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பது உண்மை) இவர்களெல்லாம்”கசடுகளை (கழிவுகளை) மட்டுமே கற்றவர்கள். அதன் வழியில் நடைபோடுகிறார்கள். ”இதுவரை எப்படியோ.. போனது போகட்டும்.
மேற்படியாளர்களை ஒருபோதும் பின்பற்றாதீர்கள். அவர்கள் சமூகத்தின் அவமானச் சின்னங்கள். அவர்களை வழிகாட்டிகளாக ஏற்றால் ஒருபோதும் நன்மை விளையாது.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.” எனும் வள்ளுவரின் குறளை மனதில் கொள்ளுங்கள்.
மனித வாழ்வில் பொருளும், சுகமும் அவசியமே. ஆனால் அதற்காக கலாச்சாரத்தின் மாண்புகளை விட்டொழிக்கக்கூடாது. அது உங்களின் வாழ்நாளிலேயே நரகத்தையே காட்டும் என்பதை மறக்காதீர்.
இனியாவது நம் முன்னோர்கள் வாழ்ந்துகாட்டிய அறநெறி வாழ்வியல் பாதையில் வாழவும், ஆரோக்கியமான உளவியல் கொண்ட நற்பண்புகள் மிகுந்த தலைமுறையை உருவாக்கி, தமிழரின் பெருமையை, பாரதத்தின் புகழை மேலோங்கச் செய்யவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
(இந்தக் கட்டுரையை எழுதிய நானும்கூட ஒரு சினிமாக்காரன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.)
Article By: M.Palanivasan
