தமிழ் மாதங்களில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மற்றும் ஆனி ஆகியவை உத்தராயண காலத்தில் வருபவை. ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகியவை தக்ஷிணாயன காலத்தில் வருபவை. தக்ஷிணாயன காலத்தில் வரும் ‘ஆவணி அவிட்டம்’ என்பது ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம்!
வேத பாடங்களைப் பாராயணம் செய்து படிப்பதற்கு உத்தராயண காலத்தையும் அதன் உட்கருத்துக்களை, உப நூல்களையும் அறிந்து கொள்வதற்கு தக்ஷிணாயன காலத்தையும் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அப்படி ஆண்டு முழுவதும் படிக்கும்போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திட, ஆவணி அவிட்ட நாளில் வழக்கம்போல் காலையில் எழுந்ததும் இறைவனைத் துதி செய்ய வேண்டும். பின்னர், நீராடி புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும்.
இதன் பிறகு எல்லா சேத்திரங்களில் உள்ள தெய்வங்கள் எல்லா நதிகளின் தேவியர்களையும் அழைத்து மகா சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். மீண்டும் ஆற்றில், குளத்தில், வீட்டில் என அவரவர் வசதிக்கேற்ப நீராடி புது ஆடைகள் அணியவேண்டும். இரண்டு முறை நீராட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
அதன் பிறகு, தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிக்கவேண்டும். திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று பூணூலையும் அணிய வேண்டும். அதன் பிறகு காயத்ரீ ஜபம் சொல்ல வேண்டும். உலகம் சிறக்கவும் நாடு சிறக்கவும் தன் நகரம் சிறக்கவும், தனது கிராமம் சிறக்கவும் தனது வீடு சிறக்கவும் காயத்ரீ ஜபத்தைச் சொல்ல வேண்டும். காயத்ரீ மந்திரத்தை தினம்தோறும் சொல்வது மிகவும் முக்கியம். சொல்லாலும் மனதாலும் செயலாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும். வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும் வைராக்கியம் போனால் சகலமும்போய்விடும் என்பதை மனதில் இருத்தவேண்டும் என்பதே ஆவணி ஆவிட்டத்தின் நோக்கம்”.
