சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவரது முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்ட பழைய 5 பைசா, 10 பைசா, ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் இருந்தால் லட்சக் கணக்கில் பணம் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது தான் அவரது மலர்ச்சிக்கு காரணம். உடனே களத்தில் இறங்கிய பழனிசாமி வீட்டிலிருந்த பழைய ட்ரங்கு பெட்டிகளை உருட்டி புரட்டி தேடுதல் வேட்டை நடத்தியதில் சில நாணயங்களைக் கைப்பற்றினார்.
கையில் நாணயங்களைப் பார்த்ததும் புதிய ஆடி கார், பங்களா வீடு, பேங்க் பேலன்ஸ் என அனைத்தும் கண்முன் வந்து போனது. உடனே அந்த முகநூல் விளம்பரத்தில் வந்த வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்ட பழனிசாமி தன்னிடம் ஏராளமான பழைய நாணயங்கள் இருப்பதாக ஆர்வத்துடன் கூறியுள்ளார். ஆடு தானாக வந்து சிக்கிவிட்டதை உணர்ந்த அந்த கும்பல், உடனே அந்த நாணயங்களை போட்டோ எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளனர்.
அவசர அவசரமாக போட்டோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பியவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது அந்த கும்பல்.. அந்த நாணயங்களுக்கு 36 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர்கள் கூற, றெக்கை முளைத்த தேவதையாக மாறி காற்றில் பறக்க ஆரம்பித்தார் பழனிசாமி.
ஆனால் அந்த கும்பல் அடுத்தடுத்து வைத்த செக் அவரது இறக்கைகளை அறுத்தெரிந்து விட்டது. முதலில் 1,500 ரூபாய் கொடுத்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் எனக் கூறி பார் கோடு ஒன்றை அனுப்பி உள்ளனர். வரப்போகிற 36 லட்சத்தில் ஆயிரத்து 500 ரூபாயை கழித்து பார்த்தவருக்கு அது ஒன்றும் பெரியத் தொகையாகத் தெரியவில்லை. அதனால் உடனே அந்த பணத்தை அனுப்பி வைத்தார்.
இரண்டாம் கட்டமாக 36 லட்சம் ரூபாய்க்கு தாங்கள் தான் வரி கட்ட வேண்டும் என்று கூறி பணம் கேட்டுள்ளனர். இப்படியாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி 22 தவணைகளாக மொத்தம் 3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர். பழனிசாமியும் கேட்ட போதெல்லாம் பணத்தை தாராளமாக அனுப்பி வைத்துள்ளார்.
23வது முறை தான் பழனிசாமிக்கு சந்தேகமே ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தன்னை ஏமாற்றுகிறார்களோ என நினைத்தவர், சம்பந்தப்பட்ட நபர்களை அதட்டி தனது பணத்தை கேட்க அந்த கும்பல் உடனே அப்ஸ்காண்ட் ஆகிவிட்டது. தன்னை இப்படி மோசடி செய்து விட்டார்களே என புலம்பிய பழனிசாமி, ஆன்லைன் மூலம் சேலம் சைபர் கிரைம் போலீசாருக்கு புகாரை அனுப்பியுள்ளார்.
வழக்கு பதிவு செய்த சேலம் சைபர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், அந்த மோசடிக் கும்பலை கொத்தாக தூக்கினர். சேலத்தை சேர்ந்த அல்லாபக்ஷ், ஷாஜஹான், முகமது இம்ரான், ஜாவேரியா பானு, அர்ஷியா பானு ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.. தொடர்ந்து இதுபோன்ற மோசடியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
