வீட்டில் நாம் தினந்தோறும் பல்வேறு சட்னி செய்வது உண்டு… அதிலும், நாவிற்கு சுவையான வேர்க்கடலை சட்னி செய்து பாருங்க…
இதற்கு தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – ½ கப் – 75g
சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1 ( சிறியது)
பூண்டு – 5 பற்கள்
காய்ந்த மிளகாய் – 6
சீரகம் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உடைத்த உளுந்து – ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
அனைத்தையும் தயார் செய்துகொண்டு, பின் வருமாறு செய்யவேண்டும்.
1. ஒரு வாணலியில் 1/2 கப் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
2. லேசாக நிறம் மாறி வேர்கடலை மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3. வேர்க்கடலை வறுத்த பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து தோல் நீக்கவும்.
4. வாணலியில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
5. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் 1 சிறிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
6. தக்காளி மென்மையாக வதங்கியதும் 6 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
7. 5 பல் பூண்டு, மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
8. இதை 2 – 3 நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர் ஆறவைக்கவும்.
9. ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஆற வைத்த வெங்காயம் தக்காளி கலவையை சேர்க்கவும்.
10. அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
11. தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
12. அதனுடன் 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும்.
13. கடுகு பொரிந்து, உளுத்தம்பருப்பு லேசான பொன்னிறமான பின்னர், சட்னியுடன் சேர்த்து கலக்கவும்.
சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
