Home Uncategorized ரேஷன் கடைகளில் 2-வது தவணை தொகை, 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று...

ரேஷன் கடைகளில் 2-வது தவணை தொகை, 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் கொடுக்கப்படுகிறது

ரேஷன் கடைகளில் 2-வது தவணை தொகை, 
14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் கொடுக்கப்படுகிறது. 

கொரோனா  நிவாரண தொகையின் 2-வது தவணை ரூ.2 ஆயிரம் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
 
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அந்தத் தொகையை ரூ.2 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

அதன்படி ஜூன் 3-ம் தேதியில் இருந்து முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் வெளியூரில் சென்று தங்கியவர்கள், தங்களின் ரேஷன் கடைகளில் அவற்றை பெற முடியாமல் இருப்பதால், ஜூன் மாதத்தில் எந்தத் தேதியிலும் முதல் தவணைத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம், 15-ம் தேதியில் இருந்து வழங்கப்படவுள்ளது. அந்தத் தொகையுடன் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பையும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் அவசரமின்றி 15-ம் தேதி முதல் இந்த மாத இறுதிவரை அவற்றை பெற்றுக் கொள்ளலாம். அவற்றை பெறும்போது ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா? என்பது மாவட்ட கலெக்டரின் தலைமையில் கண்காணிக்கப்படும். 14 மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பேசினார்.

Exit mobile version