Home செய்திகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: ஆக.25 முதல் இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து!

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: ஆக.25 முதல் இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 9-ஆவது நடைமேடையில் இருந்து 11-ஆவது நடைமேடையில் உள்ள புதிய பார்சல் அலுவலகக் கட்டடம் வரை நடை மேம்பாலம் அமைக்கும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை இரவு நேரப் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தினமும் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 மணிக்குத் தாம்பரம் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், திருமால்பூர், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் சில இரவு நேர ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என்றும், அதிகாலை 3.50 மணிக்குச் செல்லும் ரயில் தாம்பரத்திலிருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளான ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளிலும் குறிப்பிட்ட ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில் நேர அட்டவணையைச் சரிபார்த்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version