Home செய்திகள் புழல் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு: கொளத்தூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு!

புழல் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு: கொளத்தூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு!

சென்னை கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் புழல் (Red Hills) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் முக்கியக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே தரைக்கடியில் செல்லும் 1,200 மில்லிமீட்டர் அகலமுள்ள பிரதான குடிநீர் குழாயில் கடந்த மே 19 அன்று ஏற்பட்ட இந்த உடைப்பு காரணமாக, 300 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட புழல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாகக் கொளத்தூர், ஜவஹர் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதாகவும், டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சூழ்நிலையில், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உடைந்த பகுதியில் 25 அடி நீளமுள்ள புதிய குழாயைப் பதிக்கும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து, பொதுமக்களுக்குச் சீரான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version