தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அரசு விழாக்களில், மாநகரத் தந்தை என்ற அடிப்படையில் சென்னை மேயருக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கி கௌரவிப்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு மரபாகும். ஆனால், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு சென்னை மேயர் ஆர். பிரியாவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாகவே அவர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்றும் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்கள் கடந்த நிலையிலும், மரபுப்படி சென்னை மேயர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பதும், அதற்கான சூழல் இன்னும் அமையாமல் இருப்பதும் ஆரோக்கியமான அரசியலாகத் தெரியவில்லை.
அரசியல் ரீதியாக இருவேறு துருவங்களாக இருந்தாலும், அரசு நிர்வாகம் மற்றும் மரபுகள் என்று வரும்போது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து செயல்படுவதே ஒரு முதிர்ச்சியான தலைமைக்கு அழகு.
மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்தத் தூரமும், சந்திப்பு நிகழாமல் இருப்பதற்குக் காரணம் அரசியல்தான் என்றால், அது நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல; இது நிர்வாக ரீதியிலான சுமுக உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மக்களாட்சி மரபுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
