தேர்தல் வாக்குறுதிகள் எங்கே? விஜய் அரசுக்கு எழும் கேள்விகள்!
என்ன கொடுமை விஜய்-ண்ணா! ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து அடிக்கடி டாஸ்மாக் சப்ஜெக்ட் குறித்த அறிவிப்புகளே அதிக அளவில் வெளியிடுறீங்க.
மதுக் கடைகள் குறைப்பு, 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது வழங்கக் கூடாது, கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை என அடுத்தடுத்து அரசு சார்பில் வெளியாகும் செய்திகள், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சினையே டாஸ்மாக் மட்டும்தான் என்ற பிம்பத்தை விஜய் அரசு கொடுக்கிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இந்த அறிவிப்புகள் யாவும் முந்தைய எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த ஆரம்பக் காலங்களில் நாம் கேட்ட அதே பழைய தகவல்களின் மறுபதிப்பாகவே இருக்கின்றன. உண்மையில், அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டிய பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பு, மோசமான சாலைகள், ஓலா, ஊபர் மற்றும் சினிமா டிக்கெட் முன்பதிவு செயலிகளின் கட்டணக் கொள்ளை, சீரமைக்கப்பட வேண்டிய சாலைகள், ஆன்மீகத் தலங்களில் நீடிக்கும் அராஜகங்கள் எனப் பல சவால்கள் கண்முன்னே நிற்கின்றன.
இதனிடையே தேர்தல் வாக்குறுதிகளான இலவச சிலிண்டர், வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை போன்றவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பினர் உசுப்பேற்றத்தான் செய்வார்கள்; ஆனால், அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்க யோசிப்பதை விட்டு விட்டு, நிர்வாக ரீதியான குழப்பங்களைத் தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, ஒரு முதிர்ச்சியான அரசாங்கமாக மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால், முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக இந்த டாஸ்மாக் அரசியலை விட்டு வெளியே வந்து, சாமானிய மக்களின் அன்றாட வாழ்வாதாரச் சிக்கல்களைக் களைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயமாகும்.
