Home செய்திகள் ஒரே வாரத்தில் 38 வழக்குகள்; 77 பேரை சுற்றிவளைத்த சென்னை போலீஸ்!

ஒரே வாரத்தில் 38 வழக்குகள்; 77 பேரை சுற்றிவளைத்த சென்னை போலீஸ்!

சென்னை மாநகரம் முழுவதும் கடந்த ஜூன் 14 முதல் ஜூன் 20 வரை ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட்ட அதிரடி போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களின் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை போலீசாரும், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவும் (ANIU) இணைந்து இந்தத் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்தச் சிறப்பு வேட்டையின் போது, 22 கிலோ கஞ்சா, 831 கிராம் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine), 6 மில்லிகிராம் அபின் (Opium), 2 மில்லிகிராம் கொக்கைன் (Cocaine) மற்றும் 1,222 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு கார், 5 மொபைல் போன்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த 1.04 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குட்கா, மாவா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நீடிக்கும் என்றும், இதில் ஈடுபடும் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version