தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், வரும் மே 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) புதுடெல்லிக்குத் தனது முதலாவது அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
இந்த டெல்லி பயணத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்துப் பேசுவதற்கான நேரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் அவர் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார். தனது இந்த முக்கிய டெல்லி பயணத்தின் இடையே, நாட்டின் முன்னணித் தொழில் அதிபர்கள், சர்வதேச தூதர்கள், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

