தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டி. சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், அமைச்சர் சரத்குமார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் அதிகாரப்பூர்வமாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் உள்ள ஒரு பிரத்யேக அறையில் வைத்து, ஏடிஎம் கார்டு மற்றும் 500 ரூபாய் நோட்டைக் கொண்டு அமைச்சர் சரத்குமார் வெள்ளை நிறப் பவுடர் போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளைக் கையாண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளதாகப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தன் மகள் மாத்திரை சாப்பிடுவதற்காகத்தான் அதைத் தூளாக்கினேன் என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அந்த விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் சரண்யா, இந்த விவகாரம் குறித்துப் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS), 2023 மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act, 1985) கீழ் முறையான எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து, தீவிரமான குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற வேண்டிய உயர் பதவியில் இருக்கும் ஒரு அரசு அமைச்சரே இத்தகையப் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

