கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் கந்தர்மலை முருகன்அறந்தாங்கி சங்கர்
இந்த உலகத்தில் எத்தனையோ முருகன் திருத்தலங்கள் மக்களுக்காக அருளாசி வழங்கி வருகின்றன.ஆனால் நமக்கு தெரியாமல் எத்தனையோ அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கும் முருகன் தலங்கள் இருக்கத்தான் செய்கின்றன .அப்படிப்பட்ட முருகனுடைய திருத்தலங்களில் ஒன்று தான் கந்தர் மலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய் பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது தான் இந்த கந்தர்மலை என்ற முருகன் கோவில். இந்த மலையின் மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஏறத்தாழ 750 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கந்தர் மலை முருகனை தரிசிக்க 250 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.

திருமுருக கிருபானந்தவாரியார் ஜெயந்திர சரஸ்வதி சங்காரச்சாரியார் சாமிகளும் இந்த கந்தர் மலை முருகனை வந்து தரிசனம் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ம்
சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக மேலே உள்ள குகையில் ருத்திராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன.
வள்ளி குளம் என்று ஒரு குளம் இருக்கிறது. இந்த குளத்தின் மேல் சூரிய ஒளி சந்திர ஒளி படுவதில்லை. இந்த குளத்து நீரை எடுத்து பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்று இந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
இதற்கு ஒரு கதை ஒன்று உள்ளது. ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டுள்ளது. அதுகண்ட முருகப்பெருமான் எந்தக் குளத்தில் சூரியஒளியும் சந்திர ஒளியும் படவில்லையோ அந்த குளத்தில் நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும் என்று கூற வள்ளியம்மையும் இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருக விக்கல் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது .
வள்ளியின் தாகம் தீர்த்த மலைக்குகையில் அற்புத சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்தார்கள். வயது முதிர்ந்த அரிய வகை பாம்புகளும் இங்கு அதிகமாக உள்ளது. சித்தர்களும், பாம்புகளும் தற்போதும் அரூபமாக இந்த மலையில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த குகைக்குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும் என்பதும், கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் தூரஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் ‘கந்தர்மலை வேல்முருகன்’ என்பது பக்தர்களிடன் நம்பிக்கை.
இந்த கந்தர் மலை முருகனை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேறும் என்று சொல்கிறார்கள்.
திருமணத்தடை நீங்கவும் குழந்தை வரம் பெறவும் தீராத நோய்கள் தீரும் இந்த கந்தர்மலை முருகன் அருள்புரிவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கந்தப்பெருமான் இந்த கந்தர் மலையில் அருளும் ஆசியும் வழங்கி வருகிறார்.
பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் என்று அனைத்து விழாக்களும் இங்கு களை கட்டுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது நடக்கும் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண விழா மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூர், பாண்டிச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தகோடிகள் ஒருமுறை முருகப்பெருமானை தரிசனம் செய்து தங்களது துன்பங்கள் பிரச்சனைகள் நீங்கப்பெற்று வாழ்வில் வளமும் நலமும் பெருகி வாழ அந்த முருகப்பெருமானை பிரார்த்திக்கிறோம்.