சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட கடுமையான மோதல் மற்றும் வாக்குவாதம் காரணமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

அவையின் நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு வாய்ப்பு பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியம், தனது உரையின் தொடக்கத்திலேயே ‘பெருந்தலைவர் காமராஜர் வாழ்க… ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனச் சொல்லி அதை நிறைவேற்றி எங்களையும் அமைச்சரவையில் இடம்பெற செய்த ஜனநாயகன்… தளபதி … முதல்வர் விஜய்க்கு நன்றி’ எனக் கூற முற்பட்டார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள், இருக்கைகளில் இருந்து எழுந்து வந்து காங்கிரஸ் கவுன்சிலர்களைச் சூழ்ந்து கொண்டு ‘நம்பிக்கை துரோகி காங்கிரஸ்’ என ஆவேசமாகக் கூச்சலிட்டு இடையூறு செய்யத் தொடங்கினர். இதற்குப் பதிலடியாகக் காங்கிரஸ் கவுன்சிலர்களும், ‘5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல என்ன ஆச்சு’ என ஆக்ரோஷமாக முழக்கமிட, இருதரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் கைகலப்பு வரை செல்லும் அளவுக்கு முற்றியது.

இத்தகைய பதற்றமான சூழலுக்கு மத்தியில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவையை விட்டுப் பாதியிலேயே வெளியேறினர்; அதனைத் தொடர்ந்து மாமன்றத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக, மேயர் பிரியா எவ்விதத் தீர்மானங்களையும் நிறைவேற்றாமலேயே அவையை அவசரமாக முடித்து வைத்துத் தேசிய கீதம் பாட உத்தரவிட்டார்.

