Home ஆன்மீகம் “பிரம்மனின் தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர்”- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

“பிரம்மனின் தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர்”- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

பிரம்மனின் தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர்- அறந்தாங்கி சங்கர் 

உங்களுடைய பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் இறைவனை தரிசிக்க வேண்டுமா.. கீழே உள்ள பதிவை முழுவதும் படியுங்கள்..

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய அந்த சிவபெருமான் உலகின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பாரதத்தில் முக்கியமாக தமிழ்நாட்டிலே பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு பெயர்களில் அமர்ந்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மைதான்…

இந்த மனித இனம் அனுபவிக்கும் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் பரிகாரங்களை அருளக்கூடிய பல்வேறு திருத்தலங்கள் இருக்கின்றன.. அந்த ஆலயங்களில் சென்று பரிகாரங்களை செய்தால் நம்முடைய பிரச்சனைகளும் கஷ்டங்களும் துன்பங்களும் ஓடுகின்றன என்பது கண்கூடு..

உலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவன் வீற்றிருக்கும் தலம் இது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

செல்வங்களின் கடவுளாக போற்றப்படும் குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலம் இது. 

மேலும், சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் பிரம்மாவுக்கு திருவுருவச் சிலை காணப்படுவது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.

பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக் கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோவில்கள் தவிர்த்து, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் நடைமுறை இல்லை. இப்படி இருக்க இத்தலத்தில் பிரம்மனுக்கு உருவ வழிபாடு இருப்பது அதிசயங்களில் ஒன்றாகவே உள்ளது. 

இவ்வாறு படைத்தல் என்னும் மாபெரும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு கனிவுகொண்ட சிவன் தலையெழுத்தை மாற்றி எழுதிய திருத்தலம் தமிழகத்தில் எங்கே, எப்படி உள்ளது ? அத்தலத்திற்குச் சென்று வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோவில்.

இல்லறத்தில் ஐஸ்வர்யங்கள் பெருகவும், குழந்தை வரம், தொழிலில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் உள்ளிட்டவை கிடைக்கவும், சூனியம் உள்ளிட்ட கெடுதல்களில் இருந்து விலகவும் இங்கு பிரார்த்தனைகள் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

பிரம்ம புராணத்தின்படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி இந்த உலகத்தையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், உணர்வு ஆகியவற்றைப் பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலகர், புலஸ்தியர், கிரது முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர். சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என அறியப்படுகிறது. மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர் என்றும் பெயர் வந்ததாகத் தெரிகிறது. 

பூச நட்சத்திரம், பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் இத்தலத்தில் உள்ள சிவ பெருமானை வழிபட்ட அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லை விலகும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர் அம்பாளின் பாதத்தின் அடியில் வெண்ணெய் வைத்து வேண்டிவர குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

இக்கோவிலில் மேற்கு நோக்கியவாறு உள்ள ஈசனின் நேர்ப்பார்வையில் அமைந்துள்ள காலபைரவரை தேய்பிறை அஸ்டமி நாட்களில் நெய் தீபம் வைத்து வேண்டுவதன் மூலம் குடும்பச் சண்டைகள் தீர்ந்து, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.

சிவ பெருமானுக்கு உகந்த நாட்களாகப் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அன்று இத்திருத்தலத்தில் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாட்களில் மூலவர் மற்றும் சன்னதியில் உள்ள கனகதிரிபுரசுந்தரி ஆகியோருக்குச் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்படுகின்றன.

குபேரன் தனக்கு நிதி வேண்டி சிவபெருமானை வணங்கிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று என்பதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலம் என்பதும் இந்த அன்னம்புத்தூர் நிதீஸ்வரர் கோவிலின் சிறப்பாகும்..

பிரம்மனும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி புறப்பட்டார்கள் ..விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவபெருமானின் அடியை காண சென்று காண முடியவில்லை என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.

ஆனால் பிரம்மன் அன்னப்பறவையின் வடிவெடுத்து சிவபெருமானின் முடியை காண சென்று காண முடியாமல் தவித்தார் …அப்பொழுது சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூ ஒன்று வந்து கொண்டிருந்தது ..

அதை பார்த்து பிரம்மன் நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார் . அந்த தாழம்பூ நான் சிவபெருமானுடைய முடியிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னது..

உடனே பிரம்மன் அந்த தாழம்பூவிடம் “அப்படியானால் நான் சிவபெருமானுடைய முடியை  பார்த்து விட்டேன் என்று நீ சிவபெருமானிடம் வந்து கூறு” என்று பொய் சொல்ல கூப்பிட்டார்.. தாழம்பூவும்  ஒத்துக்கொண்டு சிவபெருமானிடம் வந்து பிரம்மன் உங்கள் முடியை பார்த்து விட்டார் என்று பொய் சொன்னது.. பிரம்மனும் அதை ஆமோதித்து பொய் உரைத்தார்..

அன்ன வாகனன் ,, அன்னமூர்த்தி என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு நேர்ந்தது. அதனால் மனம் நொந்த  பிரம்மன் இந்த தலத்து இறைவனை கை நிறைய மலர்கள் கொண்டு துதித்து தன்னுடைய இழுக்கு நீங்க அருள் புரிய பிரார்த்தித்து வணங்கினார்.. இறைவனும் பிரம்மனுடைய அந்த இழுக்கை போற்றி அருளினார்.. அதனால் இந்த திருத்தலத்துக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டதாக சோழன் கல்வெட்டு தெரிவிக்கிறது .

இவ்வாறு பிரம்மனுடைய தலையெழுத்தையே மாற்றிய ஆலயமாதலால் இந்த தலத்தில் வந்து வழிபடும் அன்பர்களுடைய தலையெழுத்தை மாற்றி நல்வாழ்வை இந்த அன்னம்புத்தூர் ஆலயத்தில் அருள் புரியும் ஈசன் நித்தீஸ்வரர் அருளுகிறார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன..

விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டி, பேரணி வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். திண்டிவனத்தில் இருந்து வராகப்பட்டு வழியாக வெறும் 10 கிலோ மீட்டர் பயணித்தாலும் நிதீஸ்வரர் கோவிலை அடையலாம்.

அன்னம்புத்தூர் கோவிலில் நமக்காக அருமையாக பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்ய தவமணி குருக்கள் ,(99447 35288) காத்திருக்கிறார் அவரை தொடர்பு கொள்ளுங்கள்..

வாழ்வில் வளமும் நலமும் கூடவும் மோசமான தலையெழுத்து மாறி நல்ல வாழ்க்கை அமையவும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒரு முறை நிதீஸ்வரரை வணங்கி பயன் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.. வாழ்க வளமுடன் ..ஓம் நமச்சிவாய …

அறந்தாங்கி சங்கர்

9080488624

Exit mobile version