பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தைக் திடீரெனக் குறைத்துத் திருக்கோயில் நிர்வாகம் எடுத்துள்ள முடிவு, கடலெனத் திரண்டு வரும் லட்சக்கணக்கான பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி கட்டண தரிசனம் மாலை 6.30 மணி வரையிலும், பொது தரிசனம் இரவு 7.00 மணி வரையிலும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பால், மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களும் வெளியூர்களிலிருந்து தொலைதூரம் பயணித்து வரும் எளிய மக்களும் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் நிலவும் அலைகடல் போன்ற கூட்ட நெரிசலை முறைப்படுத்த முறையான வழிவகைகளைச் செய்வதை விட்டுவிட்டு, தரிசன நேரத்தையே சுருக்கி பக்தர்களை வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத்துறையின் அப்பட்டமான நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது.
ஆகம விதிகள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தத் தன்னிச்சையான உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்று, அனைத்துப் பக்தர்களும் மனநிறைவோடு தரிசனம் செய்ய ஏதுவாகத் தரிசன நேரத்தை பழையபடி நீட்டிக்க வேண்டும் என்பதே ஆன்மீக அன்பர்களின் உரத்த கோரிக்கையாக உள்ளது.
