Home Uncategorized எல்லாம் ஜாதகப்படிதானா நடக்கின்றன?- சிறப்பு கட்டுரை!

எல்லாம் ஜாதகப்படிதானா நடக்கின்றன?- சிறப்பு கட்டுரை!

    இப்பொழுதெல்லாம் ஜாதகத்தைப் பற்றிய சிந்தனையும், அதனால் நமக்கு என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் அதிகமாகி விட்டதாகவே தோன்றுகிறது!

    என் அனுபவத்தில் முன்பெல்லாம் மாற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் ஜாதகம் பற்றிய அக்கறையின்மை இல்லாமல் இருந்தார்கள். அதனால், ”ஜாதகம்” என்பது ஏதோ குறிப்பிட்ட ஒரு மத ரீதியிலான விஷயம் என்றே இருந்தார்கள்! ஆனால், இப்போது அவர்களும் ஜாதகம் குறித்து ஆர்வம் காட்டுகிறார்கள்!

சரி.. விஷயத்திற்கு வருவோம்.

”ஜாதகம்” என்கிற விஷயம் உண்மையா? பொய்யா? என்றால் உண்மையாக இருக்கக்கூடும் என்றே நான் சந்தித்த அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன! உங்களைப்பொறுத்தவரையில் எனது கருத்து மூட நம்பிக்கையாகத் தோன்றலாம்! அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் இந்த நீண்ட கட்டுரையைப் படிக்காமலே கடந்து போகலாம்.

”ஜாதகம்” என்பது உண்மையா? பொய்யா? என்கிற  ஊசலாட்டமான மனநிலையில் இருப்பவர்கள் மட்டும் இதைப் படிக்கத் துணியலாம்.

என்னைப் பொறுத்தவரையில் ஜாதகம் என்பது கணிதமும் அறிவியலும் ஒன்றிணைந்த ஒரு சமாச்சாரம்! இந்த விஷயத்தில் ”கி.மு.” காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே நம் இந்தியஞானிகள் ஆகச்சிறந்த மேதைகளாக இருந்திருக்கிறார்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் படித்தறிந்தவற்றால் அறிந்து கொண்டேன்.

இத்தாலி நாட்டில் பிறந்தவர் “கலிலேயோ கலிலே” 1564 ஆண்டு 15, பிப்ரவரி அன்று பிறந்தவர். அதாவது சுமார் 460 ஆண்டுகளுக்கும் முன்னர்! அவர் சூரியனைத்தான் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார். அது அவர் சார்ந்த மதக் கோட்பாட்டிற்கு எதிரானது என்று அவர் மீது கருத்துத் தாக்குதல்கள் நடந்தன. விசாரணையின் முடிவில், அவரது கூற்று தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டு, வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டு மரணித்துப் போனது வரலாறு!

 

ஆனால், தொலைநோக்கிகளும் (டெலஸ்கோப்), ராக்கெட்டுகளும் என்னவென்றே அறியப்படாத காலத்திலேயே, நம் பாரதத்திருநாட்டின் முன்னோர்கள், செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு, சனி கிரகத்தின் நிறம் கருப்பு, வியாழன் கிரகத்தின் நிறம் மஞ்சள் என்றெல்லாம் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதனதன் நிறத்தைத் தீர்மானித்தார்கள்!

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தினை சூரியக்குடும்பம் என்றும், அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்துதான் சுற்றி வருகின்றன! என்று தீர்மானித்து, நம் கோவில்களில் நவக்கிரக சன்னதி நிர்மாணித்து, அதில் சூரியனை மையமாகவும், மற்ற கிரகங்களை அதனைச்சுற்றியும் அமைத்தனர். இவையெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கும் முன்னர் அல்ல.. சில யுகங்களுக்கு முன்னாலேயே கட்டமைத்தார்கள்! ஆனால், போலித்தனங்கள் பல புகுந்து விட்டதால், ஒரு கூட்டம் நம் முன்னோர்களின் ”ஞானம்” என்கிற பிரகாசத்தினை, “பகுத்தறிவு”என்னும் மை போன்ற இருட்டு எனும் போர்வாஇ கொண்டு மூடிவிட முனைகிறது!

கணிதவியலுக்குள் அறிவியல் பிணைந்திருக்கிறது!

அறிவியலுக்குள் கணிதம் கணிந்திருக்கிறது!

இவையிரண்டும் சிவனும் சக்தியும் இணைந்த கோலமாய்க் காட்சிதரும் “அர்த்தநாரீஸ்வரர்” திருக்கோலம் போல்!

பிரபஞ்சத்தைக் கணித்தவர்களே கிரகங்களுக்கிடையிலான தூரத்தைக் கணக்கிட்டனர். நட்சத்திரங்களின் வடிவங்களையும், அவை வான்வெளியில் எத்தனை கோணத்தில்? எங்கே இருக்கின்றன? என அனுமானித்து, அவற்றின் நகர்வுகளையும் துல்லியமாகக் கணித்தனர்.

சூரியனை “பித்ருகாரகன்” (தந்தைவழி) என்றும், சந்திரனை “மாத்ருகாரகன்”(தாய்வழி) என்றும் அழைத்தனர்!

சந்திரனை “மனோகாரகன்” என்று அழைத்தனர். அதாவது மனம் சம்பந்தமான உற்சாகம், கவலை, கோபம் போன்ற உணர்ச்சிகளின் காரணகர்த்தா சந்திரனே! அந்த நாளில் பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக கடலின் தன்மை வீரியமாகிறது என்பது அறிவியல் உண்மை!

அதன் அடிப்படையில்தான் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மற்றும் மீனம் என்றெல்லாம் ராசிகள் உருவாக்கப்பட்டன!

அதே நேரத்தில் ஒருபுறம் சூரியனைக்கொண்டு கணிப்புகள் தொடர்ந்தாலும், மறுபுறம் நிலவு எனப்படும் சந்திரனைக்கொண்டும் கணிப்புகள் நடக்கத்தொடங்கின!

அதன்பின் அந்தந்த ராசிமண்டலத்தில் குடிகொண்டிருக்கும் நட்சத்திரங்களை வகைப்படுத்தினர்! உதாரணமாக மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரங்களாக அஸ்வினி, பரணி, கார்த்திகை ஆகியவற்றைக் கண்டறிந்தனர்! இதில் கார்த்திகை நட்சத்திரத்தின் ஒரு பகுதி மட்டும் மேஷத்திற்கு அடுத்த ராசியான ரிஷபத்தில் இடம் பெறுகிறது.

(மொத்தம் 27 நட்சத்திரங்கள். அவற்றை பெண்பாலாக வருணித்து, அந்த 27 பேரையும் தட்சனின் மகள்களாக உருவகம் செய்து, அவர்கள் அனைவருமே சந்திரனுக்கு திருமணம் செய்துகொடுக்கப்பட்டதாக ஒரு குறியீட்டுக் கதையுள்ளது!)

இப்படியெல்லாம் பல்வேறு அம்சங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே ”ஜாதகம்!” ஒரு நாளின் 24 மணி நேரத்தை 12 ராசிகளால் வகுத்தால் ஒவ்வொரு ராசிக்கும் 2 மணிநேரம் வரும். அவரவர் பிறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு, அந்த நேரத்தில் எந்த ராசி நடக்கிறதோ அதுவே ஜென்ம லக்னம் என்றும், அந்த நேரத்தில் எந்த ரசியில் எந்த நட்சத்திர பாதம்  நடக்கிறதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் என்றும் கணக்கிட்டனர். ஆக, இது முழுக்க, முழுக்க அறிவியலும் கணிதமும் ஒன்றிணைந்த ஒரு செயல்பாடு ஆகும்.

அதே நேரத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்கின்றனவோ அவையே அந்தந்த கட்டங்களுக்குள் இடம்பெறுகின்றன! ஜென்ம லக்ன கட்டத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு அதிலிருந்து இன்ன கட்டத்தில் இன்ன கிரகங்கள் இருந்தால் இன்ன பலன் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், அதுவே இறுதியானதா? என்றால் அதுதான் இல்லை. அந்தந்த கட்டத்தில் என்னென்ன கிரகங்களின் சேர்க்கை, அவை பார்க்கும் இடங்கள், கோணம் ஆகியவற்றைக் கொண்டு பலன்கள் சொல்லப்படுகின்றன. (ஜோதிடம் என்பது கரை காண முடியாத ஒரு கடல். தற்காலத்தில் அதில் முழுமையாக நீந்தி கரைசேர்பவர்கள் எவரேனும் உள்ளனரா? என்று கேட்டால் அதை நான் கூறுவதற்கு தகுதியற்றவன்.)  

இப்படியெல்லாம் மனித மூளை கணித்தாலும், பலன்களைச் சொன்னாலும்கூட, அவை அனைத்தையும் தாண்டி ஒரு சூட்சுமம் உலக ஜீவராசிகளை இயக்குகிறது. அந்த சூட்சுமத்தை விதி என்கிறோம். அந்த விதியை தன் கட்டுக்குள் வைத்திருப்பவன் இறைவன். ஆகவேதான் நேரடியாக இறைவனைச் சரணடைய வேண்டியதாயுள்ளது.

    இதைத்தான் திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர் தனது கந்தர் அலங்காம் நூலில் ..

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

என்று பாடினார்.

அதாவது,

”நாட்கள் என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? என்னைத் தேடி வந்த கோள் (நவக்கிரகம்) என்ன செய்யும்? எமன் என்ன செய்துவிட முடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும், ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு தோள்களும், கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடும். அவை என்னை கவசமாகக் காத்து நிற்கும்” என முருக பெருமானை சரணடைந்து பாடினார்.

பரவலான கடிகார வசதிகள் இல்லாத காலத்தில் எப்படி நேரத்தை துல்லியமாக கணித்து ஜாதகம் எழுதியிருப்பார்கள்? இந்த இடத்தில்தான்  அந்தந்த பகுதியில் எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் துணைசெய்தன. அதுவே இன்று இணையதளத்தில் பல்வேறு எண்ணிலடங்கா மென்பொருள் வாயிலாக இன்றும் செய்கின்றன.

இவ்வளவு துல்லியம் கிடைத்திருந்தும், ஏன் சொல்லப்படும் பலன்களில் எத்தனையோ முரண்பாடுகள்?

ஒரு பெண் ”தீர்க்க சுமங்கலியாக இருப்பாள்”என்றுதான் மணம் முடிக்கிறார்கள். ஆனால், குறுகிய காலத்தில் அவள் கணவன் அகால மரணமடைகிறான்!

வசியப்பொருத்தம் பார்த்துதான் மணம் முடிக்கிறார்கள். ஆனால், மூன்று மாதத்தில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிக்கொள்கிறார்கள்!

குழந்தை பாக்கியம் நிச்சயம் இருக்குமென்று கணித்து செய்தாலும், குழந்தைபேறுக்காக செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு நடையாய் நடக்கிறார்கள்! (இப்போதெல்லாம் இதற்கு E.M.I. வேறு கிடைக்கிறதாம்!)

ஆக, முடிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நம் முன்னோர்கள் முட்டாள்களில்லை என்பதே.

ஜாதகம் கணிக்கப்படும் முறையும் தவறில்லை! (பலன்களைச் சொல்லக்கூடிய ஜோதிடரிடம் குறைபாடுகள் இருக்கலாம். அதையும் தாண்டி அவருக்கு வாக்குபலிதம் என்கிற யோகமும் இருக்கவேண்டும்!)

இன்றைய கணிணி யுகத்தின் மென்பொருள் கணிப்புகளும் தவறில்லை!

தவறு எங்குதான் நிகழ்கிறது?

இன்றைய  அவசரமான வாழ்வியல் முறையானது நம் குடும்ப முன்னோர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், உணவுமுறைகள், அன்றாட பழக்க வழக்கங்கள், ஆண் மீது பெண்ணுக்கும், பெண்மீது ஆணுக்கும் இடையிலான மதிப்பு, மரியாதை, பாரபட்சமற்ற உயரிய அன்பு, ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லும் சகிப்புத்தன்மை இவை அனைத்திலிருந்தும் நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் என்பதே உண்மை.

அவரவரின் அதீத ஆசைகளும், போலித்தனமான கற்பனைகளும், பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை என்று கட்டமைத்துக்கொண்ட மனப்பாங்கும்,  ”நான், எனது” என்கிற அகங்காரமும், மேற்கத்திய நாகரீகத்தில் மூழ்கி, அவர்களின் உணவுமுறைக்கு முழுமையாக மாறி, நம் நாட்டு பருப்பு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை ஏளனமாகக் கருதும் போக்கும், எந்நேரமும் பதற்றமும், பரிதவிப்பும், பழியுணர்ச்சியும், பிறருடன் அனுசரித்துச் செல்ல முடியாத சகிப்புத்தன்மையற்ற தன்மையும் போன்ற பல்வேறு காரணிகளே ஜாதகபலன்களையும் தாண்டி மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றன.

திருமணம் மட்டுமின்றி பிற அனைத்திலும் நம் ஒவ்வொரு சடங்குகளும் வெற்று சம்பிரதாயத்திற்காக மட்டுமே கடைபிடிக்கிறோம். அதில் நாம் உண்மையான, ஆத்மார்த்தமான பங்களிப்பைத் தருவதில்லை. விசேஷ் நிகழ்ச்சிகளை கார்பரேட் ஸ்டைலில் வடிவமைத்து போலியான குத்தாட்டங்களாக மாறிவிட்டன.

எத்தனையோ மாறிவிட்டாலும், இறைவனின் சூட்சுமம் நம் கர்மாவின் வடிவில் நம்மை ஆட்டுவிக்கிறது என்பதே உண்மை. ஆக, எப்படித்தான் ஜாதகத்தைக் கணித்தாலும், வாழ்க்கையில் குத்தாட்டம் போட்டாலும், விதியின் விளையாட்டை ஏற்கும் மனோபலத்தை இறைவன் நமக்களிக்க வேண்டுமென அவனையே சரணடைவதைத்தவிர வேறு மார்க்கமில்லை!

நம் மனம் நம்மை ஆட்டுவிப்பதை கணித்து, அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதே நம்மால் ஆவது!  

மு.பழனிவாசன்

Exit mobile version