ஸ்டார்ட்..ஆக் ஷன்..
அத்தியாயம்.13.
இயக்குனர்கள். கிருஷ்ணன் – பஞ்சு..
1952..!
‘பராசக்தி’…திரைப் படம் வெளி வந்தது!..
அந்த புரட்சிக் காவியத்தை … இயக்கி பெருமை பெற்றார்கள் திரு. கிருஷ்ணன் – பஞ்சு அவர்கள் !
இந்தப் படத்துக்கு வசனம் எழுதிய கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள் … பின்னாளில் தமிழக முதல்வராக ஆனது.. இன்னொரு வரலாறு !…
தமிழ் திரைப் பட வானில் சிம்மக் குரலோன்.. நடிகர் திலகம்.. என்றெல்லாம் மகுடம் சூட்டப்பட்ட திரு. சிவாஜி கணேசன் அவர்கள் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம்… பராசக்தி!..
இந்த படம்… நடிப்பிற்கு ஒரு புது இலக்கணம். வகுத்த.. நடிகரை … திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மூலமாகத் தந்தது..!
அதுவரை வெளி வந்த படங்களில் … நாடக மேடை அனுபவங்கள் … தந்த பாணியில் தான் நடித்தார்கள்!..
திரைப்படங்கள் என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதிதாக உருவாக்கியவர் திரு சிவாஜி கணேசன் அவர்கள்!..
அவரது கண்கள் பேசின! உதடுகள் நடித்தன! புருவ அசைவுகள் உணர்வுகளை கடத்தின!.. குரல் வளை நடித்தது…! கை விரல்கள் நடித்தன! நடக்கும் நடை உணர்வுகளை கொட்டியது! முதுகு கூட நடித்தது! திரை நடிப்பிற்கு உடல் மொழி.. முக்கியம் என்பதை.. உருவாக்கினார்.. திரு சிவாஜி கணேசன் அவர்கள்!.
அவரது மாறுபட்ட நடிப்புக்கு வழி அமைத்து.. Shots களை அமைத்து.. காட்சிகளை இயக்கினார்கள்.. திரு கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் !..
பராசக்தி மூலம் உருவான நடிப்பு சக்தி தமிழ்த் திரைப் பட உலகை பல்லாண்டு காலம் ஆட்சி செய்தது!…
பராசக்தி படத்தின் வசனங்களில்.. தெளித்த நாத்திக வாதங்கள்.. அதிர் வலைகளை ஏற்படுத்தின..!
‘கோயிலைத் தாக்கினேன்.. கோயில் வேண்டா மென்பதற்காக அல்ல.. கோயில். கொடியவர் களின் கூடாரமாக மாறி விடக் கூடாது என்பதற்காக’… என்ற வசனம்.. இன்று… நடக்கும்.. பல நிகழ்வுகளை.. அன்றே… தீர்க்க தரிசனத்தோடு சொன்னதற்கு சாட்சியாக அமைந்தது!
கலைஞர். மு.கருணாநிதி அவர்கள் எழுதிய வசனங்கள் பட்டி தொட்டி எங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியங்களையும் கொள்கைகளையும் முழங்கின!..
ஒரு மறுமலர்ச்சி படமாக… ஒரு Cult film ஆக.. பராசக்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது!
திரு.கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் கலை வாழ்விலும்.. ஒரு மைல் கல்லாக அமைந்தது ….!..
1954 இல் திரு.கிருஷ்ணன் – பஞ்சு அவர்களின் இயக்கத்தில் …
வெளி வந்த ‘ரத்தக் கண்ணீர் ‘..
தமிழ் திரைப் பட வரலாற்றில் இன்னும் ஒரு புரட்சிகரமான படம்!..
நடிகவேள். திரு.எம்.ஆர்.ராதா அவர்கள்..
1907-இல் மெட்ராஸில் பிறந்தவர் !.. ஆலந்தூர் பாய்ஸ் டிராமா கம்பெனியிலும்.. பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலும் நடிகராக இருந்திருக்கிறார்…
1937 இல் ‘ராஜசேகரன் ஏமாந்த சோனகிரி’ என்ற படத்தில் அறிமுகம் ஆகி… ‘சந்தனத்தேவன்’.. ‘பம்பாய் மெயில்’.. ‘சத்தியவாணி ‘.. போன்ற படங்களில் நடித்திருக்கிறார்!
பிறகு சில காரணங்களால் திரைப்
படத் துறையை விட்டு விலகி முழுக்க நாடகத் துறைக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார் !..
பல வெற்றி நாடகங்களை நடத்தியிருக்கிறார்!..
திருவாரூர்.k.தங்கராஜ் அவர்கள் எழுதி
திரு.எம்.ஆர்.ராதா. அவர்கள் நடித்த ரத்தக்கண்ணீர் நாடகத்தை இயக்குனர்கள் திரு.கிருஷ்ணன் -பஞ்சு அவர்கள் திரைப்படமாக இயக்க.. நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்க…
திரு.எம்.ஆர்.ராதா அவர்கள்.. திரையுலகில் மறுபிரவேசம் செய்தார்!… வெளிநாட்டிலிருந்து திரும்பிய பணக்கார மோகம் கொண்ட இளைஞன் தன் தாய்க்கும்… தன் மனைவிக்கும் செய்யும் கொடுமைகள்..!.. விலைமாது பெண்ணோடு தன் வாழ்க்கையையும் … சொத்தையும் …தொலைத்து விட்டு… தொழு நோயாளியாகி… அல்லல் பட்டு தன் மனைவியை … தன் நல்ல நண்பனுடன்… தன் கையாலேயே சேர்த்து வைத்து ஏற்றுக் கொள்ள செய்து விட்டு உயிரை விடும் ஒரு கதாபாத்திரம்!
அந்த வேடத்தை மிக அற்புதமாக கையாண்டிருந்தார்.. திரு.எம்.ஆர்.ராதா அவர்கள்! ஈ.வே.ரா பெரியார் அவர்களின் தீவிர பக்தரான திரு.K.தங்கராசு அவர்களின் வசனங்களும் பெரும் பாராட்டு பெற்றன!
திரு.எம்.ஆர்.ராதா அவர்கள் தமிழ் திரையுலகின் மிகவும்.. அத்தியாவசியமான நடிகராக மாறினார்..!
இயக்குனர்கள் திரு.கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் இயக்கிய இன்னொரு மறக்க முடியாத திரைப் படம்….
மக்கள் திலகம்.. திரு.எம்.ஜி.ஆர்.. அவர்கள் நடித்த முற்றிலும்.. மாறுபட்ட ‘பெற்றால் தான் பிள்ளையா’….
திரு எம்.ஆர்.ராதா அவர்களின் திரையுலக மறுப் பிரவேசத்திற்கும் … திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் மாறுபட்ட திரைப் படத்துக்கும் … இயக்குனர்களாக இருந்த … திரு கிருஷ்ணன் பஞ்சு அவர்களே எதிர்பார்க்காத விபரீத.. சம்பவம் ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்துக்கு பிறகு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் … திரு.எம் ஆர்.ராதா அவர்களுக்கும் இடையே நிகழ்ந்தது…!
தமிழக அரசியலையே உலுக்கிய அந்த சம்பவம்?…
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்
