தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலும் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் தமிழக நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அதவ் அர்ஜுனா, அரசு ஒப்பந்ததாரர்களுடன் (Contractors) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்பு டெண்டர் எடுப்பதற்கு முன்னரே முதலமைச்சர் ஃபண்ட், பார்ட்டி ஃபண்ட், மினிஸ்டர் ஃபண்ட், அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஃபண்ட் என 20 முதல் 25 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், தான் தொழில் செய்தவன் என்பதால் அது தமக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்; ஆனால், தற்போதைய புதிய ஆட்சியில் “முதலமைச்சர் எவ்வழியோ, அமைச்சர்களும் அவ்வழியே” என்ற அடிப்படையில், தனது பெயரையோ, தனது குடும்பத்தினரின் பெயரையோ சொல்லி யாரிடமும் கமிஷன் கலாச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்றும், அத்தகைய “யூஸ் மை நேம்” (Use my name and collect money) கலாச்சாரத்திற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது எனத் தெளிவுபடுத்திய அமைச்சர், இனிமேல் டெண்டர்களில் எந்தவிதமான கமிஷன் அழுத்தமும் இருக்காது என்றும், அதே நேரத்தில் அரசுப் பணிகளின் தரத்தில் (Quality) எவ்வித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒப்பந்ததாரர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
