நாடக மேடையிலிருந்து திரையில் அடிவைத்த பெரும்பாலான நடிகர்கள் மிகை நடிப்புக்குப் பெயர்பெற்றவர்கள்.
அதற்குக் காரணம் உண்டு. அது, ஒலிபெருக்கி கண்டறியப்படாத காலம். கடைகோடியில் அமர்ந்து நாடகம் பார்ப்பவர்களுக்கும், நடிகனின் குரல் ‘கணீர்’ என்று கேட்டாக வேண்டும்.
அதற்காகத் தொண்டையை விரித்து, கத்திப் பேசி, அதிகப்படியான அங்க சேஷ்டைகள் செய்து நடித்தாக வேண்டும். ஒலிபெருக்கி, மின் விளக்குகள் வந்தபிறகும் ரத்த அணுக்களில் கலந்ததுபோல் மிகை நடிப்பிலிருந்து பலரால் வெளிவர முடியவில்லை.
ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய கலைஞர்கள் அதை உதறியெறிந்தனர். அந்த வரிசையில், கதாபாத்திரத்துக்குத் தேவைப்படும் நடிப்பை அளந்து கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர் எஸ்.வி.எஸ். உணர்ச்சிக் கட்டுப்பாடு, வசனமற்ற நடிப்பு, விழி அசைவுகளை மையப்படுத்திய நுணுக்கமான முகபாவங்கள், உடல்மொழியை உணர்வு வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்துவது போன்ற உத்திகள்தாம் திரைக்குத் தேவைப்படும் நடிப்பு முறை.
அப்படியொரு இயல்பான நடிப்பு முறைக்கு அகராதியாக மாறிக்காட்டிய அபூர்வக் கலைஞர்தான் எஸ்.வி.சுப்பையா.. சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, இரும்புத்திரை, பொன்னூஞ்சல்,நீதி, அரங்கேற்றம் போன்றவை மறக்க முடியாத சிறந்த படங்கள். ஜெமினிகணேசனுடன் மணாளனே மங்கையின் பாக்கியம், சவ்பாக்கியவதி, வஞ்சிக்கோட்டை வாலிபன், ராமு, பார்த்திபன் கனவு ஆகிய படங்கள் சிறந்தவை. பார்த்திபன் கனவு படத்தில் ஓடக்கார பொன்னனாக வருவார்.
“ஆதிபராசக்தி” படத்தில் அபிராமிபட்டராக அற்புதமாக நடித்திருப்பார். அந்த நடிப்பை சொல்லால் கூறயியலாது. “சொல்லடி அபிராமி” என்ற பாடலில் நடிக்கும்போது, பக்திப் பிழம்பாக மாறிவிடுவார். எம்.ஜி.ஆருடன் இதயக்கனி என்ற படத்தில் நடித்தார். இவர் சொந்தமாக தயாரித்த படம் “காவல்தெய்வம்”.
இப்படத்தில் ஜெயிலராக வந்து வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் அவர் பேச்சும் நடிப்பும் மிகையில்லாமல் சிறப்பாக இருக்கும். கவுரவ வேடத்தில் சிவாஜிகணேசன் பனைமரமேறும் சாமுண்டியாக நடித்தார்.
இப்படத்தின் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார். சிறந்த குணச்சித்திர வேடங்களில் தமிழ்மனங்களில் பதிந்த எஸ்.வி.சுப்பைய்யா அவர்கள் இதே 29-1-1980-ல் காலமானார்.
என்னதான் பல நடிகர்கள் தமிழ்த்திரையுலகில் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துக்கொண்டவர் இவர்.
