Home Uncategorized எவ்வாறு மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது? மின் கட்டணம் – ஓர் பார்வை!

எவ்வாறு மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது? மின் கட்டணம் – ஓர் பார்வை!

தமிழகத்தில் மொத்தம் 1.75 கோடி வீட்டு உபயோக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில் 2 மாதங்களில் 100 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தியிருந்தால் அதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. 100 யூனிட்டில் இருந்து 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

200 யூனிட்டில் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2-ம், 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50-ம், 201 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ம், 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வீடுகளில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு முதல் 100 யூனிட்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு பயன்படுத்தப்படும் மின்சாரம் ‘டெலஸ்கோபிக் டாரிஃப்’ என்ற வகையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, மிகக் குறைவாகப் பயன்படுத்துபவர்களுக்கு குறைவான கட்டணமும் மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு மிக அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒருவர் இரண்டு மாதங்களுக்கு இரு நூறு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், பின்வருமாறு அவருக்கான கட்டணம் கணக்கிடப்படும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை ரூ. 1.5): 100X 1.5 = ரூ. 150

நிலையான கட்டணம்: ரூ. 20

ஆகவே மொத்தக் கட்டணம்: 170 ரூபாய்

ஆனால், அதே நபர் இரு மாதங்களுக்கு 380 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் வெகுவாக அதிகரிக்கும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 1.50க்குப் பதிலாக ரூ. 2ஆக அதிகரிக்கும்): 100X 2= ரூ. 200

201வது யூனிட்டிலிருந்து 380 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 3 ரூபாய்) : 180 X 3= ரூ. 540

நிலையான கட்டணம்: ரூ. 30

ஆகவே மொத்தக் கட்டணம் 740 ரூபாயாக உயரும். முந்தைய மாதத்தைவிட அதிகமாக 180 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் கட்டணம் 570 ரூபாய் அதிகரிக்கும்.

அதே நபர் 510 யூனிட்களைப் பயன்படுத்தினால், கட்டணம் இன்னும் வெகுவாக அதிகரிக்கும். 101 – 200, 201-500, 501 யூனிட்களுக்கு மேல் என எல்லாப் பிரிவிலுமே கட்டண அதிகரிப்பு இருக்கும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 3.50ஆக அதிகரிக்கும்): 100X 3.50 = ரூ. 350

201வது யூனிட்டிலிருந்து 500 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 4.60 ரூபாய்) : 300 X 4.6 = ரூ. 1380

501வது யூனிட்டிலிருந்து 510வது யூனிட்வரை

(ஒரு யூனிட்டின் விலை ரூ. 6.60) : 10 X 6.6 = ரூ. 66

நிலையான கட்டணம்: ரூ. 50

ஆகவே மொத்தக் கட்டணம் 1,846 ரூபாயாக உயரும். முதல் மாதத்தைவிட அதிகமாக 310 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் கட்டணம் 1,676 ரூபாய் அதிகரிக்கும்.

Exit mobile version