ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஓடுகுண்டாவை சேர்ந்த கோபால் மகள் பிரசாந்தி (24). இவர் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தார். இவரும் சித்தூர் மாவட்டம் குப்பத்தை அடுத்த மார்வாடா கிராமத்தைச் சேர்ந்த வாசு என்பவரும் ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்த்தபோது காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்த தன்னுடைய காதலன் வாசுவை பார்க்க பெண் போலீஸ் பிரசாந்தி ஓரிரு நாட்களுக்கு முன்பு மார்வாடா கிராமத்துக்கு சென்று வாசுவை பற்றி விசாரித்தார்.
அப்போது வாசு ஏற்கனவே திருமணமானவர் என தெரிய வந்தது. இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரசாந்தி வாசுவிடம் என்னை காதலித்து ஏமாற்றி விட்டாயே எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். வாசலுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன தகவலை கேள்விப்பட்ட பிரசாந்தியின் பெற்றோர், தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக சம்பவத்தன்று இரவு மீண்டும் பெண் போலீஸ் பிரசாந்தி மார்வாடா கிராமத்திற்கு சென்று, காதலன் வீட்டின் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் வாசுவை கைது செய்தனர். போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
