கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர்.
இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார்.
இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தை தொட்டுள்ளது.
ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த டாப் தமிழ் நியூஸ் நிர்வாகம், தற்போது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளு பேத்திகள் எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோர் பாட, மாண்டலின் கலைஞர் ராஜேஷ் இசையில் புதுப்பொலிவுடன் வெளியிட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா, ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், மாண்டலின் ராஜேஷ், பாடகிகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
