Home Uncategorized காஞ்சி மஹா பெரியவா அவதார தினம் இன்று!

காஞ்சி மஹா பெரியவா அவதார தினம் இன்று!

நம் பாரதபூமி எண்ணற்ற புண்ணியங்களால் செழித்தோங்கும் பூமி. தொன்றுதொட்ட காலம் முதல் சனாதன தர்மத்தின் வழியில் எண்ணற்ற ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் போன்றோர் இம்மண்ணின் புனிதத்தை போற்றிப்பாதுகாத்து வந்துள்ளனர். இன்றும் அது தொடர்கிறது. அந்த தொடர்ச்சியில் ஒருவராக அவதாரம் எடுத்தவர்தான் ”காஞ்சி மஹா பெரியவா” அவர்கள். ”சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்” என்று துறவறப்பெயரால் அறியப்படும் மகா சுவாமிகளின் பூர்வாசிரமப்பெயர் “சுவாமிநாதன்” ஆகும். ஆனாலும் மக்களால் “காஞ்சி மஹா பெரியவா”என்பதே அவரது அடையாளப் பெயரானது. ஆம்! உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன் என்பதுபோல் ”மஹா பெரியவா” என்றாலே அது இவரைத்தான் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்) குறிக்கும். 

    

ஆதிசங்கரருக்குப்பின் அநேகமாக பாரதபூமியெங்கும் யாத்திரை மேற்கொண்டு அருளாசி வழங்கியவர் மஹாபெரியவா என்றால் மிகையில்லை. அவ்வாறு சென்ற இடமெல்லாம் திருக்கோயில் புனரமைப்பு, அந்தந்த பகுதியின் பூர்வாசிரமப்பெருமைகளை எடுத்துக்கூறி மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கினார். இதன் மூலம் மக்கள் தங்கள் கலாச்சாராத்தின் பெருமைகளையும், தங்கள் வாழ்விடத்தின் வரலாற்றையும் நன்குணர்ந்தனர்.

    

காஞ்சி சங்கர மடத்தின் பீடத்தை இவருக்கும் முன் 67 பேர் அலங்கரித்திருக்கிறார்கள். மஹாபெரியவா அவர்கள் 68-ஆவது பீடாதிபதியாவார். அத்வைத கோட்பாட்டில் ஆதிசங்கரர் வழியில் அதீத ஈடுபாடுகாட்டி பின்பற்றியவர் மஹாபெரியவா. இறைவனால் படைக்கப் பட்ட உயிர்களுக்கிடையே உயர்வு தாழ்வு ஏதுமில்லை. அனைத்தும் சமம் என்பதே சனாதன மார்க்கத்தின் ஆணிவேர். அந்த சித்தாந்தத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும், அதனை தன் வாழ்நாளில் தீவிரமாக கடைபிடித்ததோடு மற்றவர்களும் அதேவழியில் பயணிக்க அரும்பாடு பட்டவர் மஹா பெரியவா அவர்கள். வரலாற்றுத் திரிபுகளால் நம் மக்களின் ஒற்றுமையை குலைந்திருந்த காலகட்டத்தில் சாதிய வேறுபாடுகளற்ற ”சமம்” என்கிற கோட்பாட்டை நிலைநிறுத்த சேவை செய்தவர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில் கடைநிலையில் அவதியுற்ற மக்களின் ஆபத்பாந்தவானாக விளங்கி ஆதரித்து அருளியவரும் இவரே.

 

கருணைக்கடலாக விளங்கிய மஹாபெரியவா அவர்களின் எண்ணற்ற நற்பணிகளால் அடித்தட்டு மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்தவர். இதுகுறித்த வரலாற்று நிகழ்வுகள் அவர் வாழ்க்கையில் நிரம்பியிருந்தன. பூஜை, புனஸ்காரங்கள், திருக்கோயில் பராமரிப்பு, மட்த்தின் நிர்வாகம் என்பதோடு தன்னைச்சுற்றி வட்டத்தினை வரைந்து கொள்ளாமல் அனைத்தையும் கடந்து “மக்கள் சேவையே மகேசனுக்கான சேவை” என்பதை உணர்த்தச்செய்தவர் மஹா பெரியவா அவர்கள். சுமார் ஆயிரமாண்டுகளுக்கும் முன் வைணவ சம்பிரதாயத்தில் தோன்றிய ஸ்ரீ ராமானுஜர் அவர்களுக்குப் பின் அவர்தன் வாழ்நாளில் சாதித்தவைகளை கி.பி.19 ஆம் நூற்றாண்டில் அவதரித்த மஹா பெரியவா அவர்கள் சாதித்தவர் என்றால் மிகையில்லை.
    

பெருமைகள் பல வாய்க்கப்பெற்ற மஹா பெரியவா அவர்கள் அவதரித்தது வைகாசி மாதம் அனுஷ நட்சத்திர நாளான இன்று (10-06-2025) அவரை வணங்கி நம் நலமும், வளமுமான வாழ்நாளுக்கான வல்லமை பெறுவோம்.

-மு.பழனிவாசன்

Exit mobile version