Home சுற்றுலா தாய்லாந்து பயணம் திட்டமா? இந்தியர்களுக்கான முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட இந்தியத் தூதரகம்!

தாய்லாந்து பயணம் திட்டமா? இந்தியர்களுக்கான முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட இந்தியத் தூதரகம்!

தாய்லாந்து நாட்டிற்குச் செல்லும் இந்தியக் குடிமக்களுக்கான முக்கியப் பயண வழிகாட்டு நெறிமுறைகளைத் தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதலின்படி, பயணிகள் தாய்லாந்து சென்றடையும் தேதியிலிருந்து குறைந்தது 6 மாத கால அவகாசம் கொண்ட தகுதியான கடவுச்சீட்டு (Passport), உறுதி செய்யப்பட்ட திரும்பும் பயணத்திற்கான டிக்கெட்டுகள், தங்கும் விடுதி முன்பதிவுகள் மற்றும் தெளிவான பயணத் திட்ட விவரங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், அந்நாட்டிற்குச் செல்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாகத் தாய்லாந்து டிஜிட்டல் வருகை அட்டையை (TDAC) இணையவழியில் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், பயண நோக்கத்திற்கு ஏற்பச் சரியான விசா பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசா விலக்கு அல்லது வருகை விசா (VOA) வசதியைப் பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நபருக்குக் குறைந்தது 20,000 தாய் பாட் (THB) ரொக்கப் பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், குடிவரவு (Immigration) சோதனைக்குச் செல்லும் முன்பே தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குழுவாகப் பயணம் செய்பவர்கள் தனித்தனியாக ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், வேலைவாய்ப்பு நிமித்தமாகச் செல்பவர்கள் விசா விலக்கு அல்லது வருகை விசா வசதியைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் தாய்லாந்து வழியாக வேறு நாடுகளுக்குச் செல்பவர்கள் இறுதி இலக்கு நாட்டின் முறையான விசா ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் போன்ற முக்கிய எச்சரிக்கைகளும் இதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Exit mobile version