நாம் வாழும் இந்த பூமியானது ஒளியால் இயங்குகிறது.
சூரிய ஒளியால் பகல் சந்திர ஒளியால் இரவு மற்றும் நட்சத்திரங்களின் ஒளி. ஏதோ ஒருவகையில் ஒளியைத்தருவது ”ஜோதி” உறுதிக்கு இன்னொரு பெயர்வடிவம் “திடம் அல்லது அடர்த்தி”.
இந்த ஜோதியும் திடமும் இணைந்ததுதான் ”ஜோதிடம்” மனிதனின் பிறந்த நேரத்தினை ஒளிரும் தன்மை பாயும் இடத்தை வைத்து பல அம்சங்களைக் கணக்கிட்டனர்.
இது ஒரு கணிதம் என்றும் சொல்லலாம். விஞ்ஞான ரீதியில் விளக்கங்களும் உள்ளன. பிறந்த நேரம் சரியாக குறிப்பிடப்பட்டு இருக்கிறதென்றால், ஜோதிடக் கணிப்பில் நல்ல திறன் வாய்ந்தவர்கள் துல்லியமாக பலன்களைக் கூறுவதுண்டு.
மனிதப் பிறப்பினை 27 நட்சத்திரக்கூட்டங்களாகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, 12 ராசிக்கும் ஒவ்வொரு கட்டமென 12 கட்டங் களாக்கினர்.
இந்த கட்டங்களின்படி சூரியன் முதல் கேது வரையிலான கிரஹங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக் கட்டத்திற்கு குடியேறும். பின் வெளியேறும். ஆனால் நட்சத்திரங்கள் இடப்பெயர்ச்சி ஆவதில்லை.
ஒருநாளின் 24 மணி நேரத்தை ஒரு ராசிக்கு தலா 2 மணிநேரம் என பிரித்து, 12 ராசிகளுக்கும் 24 மணிநேரம் என வகுத்தனர். இதில் ராகுவும் கேதுவும் நிழல் கிரஹங்களாகும்.
ஒருவர் பிறக்கும் நேரத்தில் எந்த ராசிக்குரிய இடத்தில் சூரிய ஒளி பாய்கிறதோ அந்த இடத்தை (ராசியை) ”ஜென்ம இலக்கினம்” என்றும், சந்திரனின் ஒளியானது படரும் இடத்தை ஜென்ம ராசி என்றும், நம் முன்னோர்கள் பெயர் சூட்டினர். எந்த ராசிகளில் சூரியஒளியும், சந்திரஒளியும் பாய்கின்றவோ அந்த ஒளியே (ஜோதி) நமது பிறவி முடியும் வரை வழி நடத்துகிறது.
ஒவ்வொரு கிரஹங்களும் ஒருவரின் ஜனன காலத்தில் அவை இடம்பெறும் ராசிக்கேற்றவாறு பலன் தருகின்றன. மேலும் அதற்குரிய் குணாதிசயங்களையும் கொண்டுள்ளன.
உதாரணமாக, ஒருவரின் இலக்கினத்தில் இராகு இருந்தால், அந்த ஜாதகத்திற்கு உரியவர், முதலில் உலக இன்பங்களை சுகிப்பவராகவும், அதன்பின் ஞானம் பெறுபவராகவும் விளங்குவார்.
கேது லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு “ஞானமே” பிரதானமாக இருக்கும். இறைவனைத்தேடும் பாதையில் பயணிப்பார். இப்படி அந்தந்த கிரஹங்கள் இடம்பெற்ற அந்தந்த இடங்களுக்கு ஏற்ற குணாதிசயங்களும் , பலன்களும் கிட்டுகின்றன.
இவை இப்படியென்றால், ஒருவருக்கு சாதகமற்ற சூழ்நிலை அவரது ஜென்ம ஜாதகத்தில் இருப்பினும், நம்மை படைத்த இறைவன் மீது பற்று கொண்டு, அவனை சரணடைந்து, அவனுடைய பேரருளால், தர்மவழி மீறாமல் முயற்சிகளைத் தொடர்ந்தால் அவருக்கு, கிரஹங்கள் சாதகமாகவே செயல்படுவர் என்பது திண்ணம். இதையே “நாளென் செய்யும்; கோளென் செய்யும்” என்பர்.

