சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அரசு கொரோனா மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த மையத்தில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு இதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரிழிவு, உளவியல் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, டி.கே.ரங்கராஜன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
