மதுரை மாநகரையே பக்தி வெள்ளத்தில் மூழ்கடிக்கும் உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ அதிவிமரிசையாக நடைபெற்றது.
கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் என களைகட்டிய விழாவின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், உலக நன்மைக்காகவும் செழுமைக்காகவும் ‘பச்சை பட்டு’ உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது அங்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் காத்திருந்த வீரராகவ பெருமாள் அவரை வரவேற்க, கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என முழக்கமிட்டு, தோல் பைகளில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
வழிநெடுகிலும் சர்க்கரை தீபம் ஏற்றியும், மலர் தூவியும் மக்கள் திரண்டிருக்க, வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளிய இந்தக் கண்கொள்ளாக் காட்சி மதுரையை ஒரு பெரும் ஆன்மிகக் கடலாக மாற்றியது.


