Home ஆன்மீகம் அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்த குற்றாலநாதர்! ஆன்மீக தகவல்!

அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்த குற்றாலநாதர்! ஆன்மீக தகவல்!

அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்த குற்றாலநாதர் – அறந்தாங்கி சங்கர்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாக விளங்கும் சிவபெருமான் பல்வேறு திருத்தலங்களில் அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி அளித்திருக்கிறார்..

அப்படிப்பட்ட அற்புதமான ஆலயங்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஆகும்..

குற்றாலநாதர் கோவில் மலைகள் சூழ்ந்த இயற்கையழகு வாய்ந்த சூழலில் சுமார் 5000 அடி உயரம் கொண்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத்தொடர் திரிகூடமலை என்றழைக்கப்படுகிறது.

கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை, சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. 

கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிருந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. 

பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். 

அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். 

முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.

கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்தவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த, விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவ-பார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. 

அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் லிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.

கு என்றால் பிறவிப்பிணி. தாலம் என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

*அருள்மிகு குழல்வாய்மொழி, பராசக்தி தாயார் உடனுறை குற்றாலநாதர்

 திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம்..குற்றாலம், திருத்தலத்தில் அமைந்துள்ளது..

வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் ஒரு முறை திரு குற்றாலம் சென்று குற்றால அருவியிலே நீராடி அம்பாளையும் தரிசனம் செய்து வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்..

ஓம் நமச்சிவாய…

அறந்தாங்கி சங்கர்.

Exit mobile version