தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என தில்லைக்கூத்தனாம் சிவபெருமானை சிந்தையிலிருத்தி கொண்டாடுதல் மரபு. லிங்கவடிவத்தில் எழுந்தருளும் சிவபெருமான் தோலாடை, தலையில் சடைமுடி, அதனில் கங்கை, கழுத்திலே கொடிய நாகத்தினை ஆபரணமாக்கி, கையிலே உடுக்கையுடன் கூடிய திரிசூலம் ஏந்தி அடியவருக்கு அருள்பவர்.
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய இன்னுமொரு திருக்கோலமே லிங்கோத்பவர் கோலம். சிவாலயங்களில் மூலவர் வீற்றிருக்கும் கருவறைக்கு நேர்ப் பின்னால் கோஷ்டம் எனப்படும் பிரகாரத்தின் வெளிப்பக்கம், மேற்கு நோக்கி அருள்பாலிப்பவர் லிங்கோத்பவர். இந்த லிங்கோத்பவர் தோற்றத்தின் பொருளென்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.
இனியாவது பொருளறிந்து பக்தி செய்து பலன்களை பெறுவோம். அதனை எளியமுறையில் சுருக்கமாக எடுத்துச்சொல்வதே இந்த பதிவு. ஒரு லிங்க மேனி. அதன் நடுவே கீழிருந்து மேலாக நீள்கோள இடைவெளி. அதனுள்ளே புடைப்புச் சிற்பமாக சிவபெருமானின் விஸ்வரூபத் தோற்றம். லிங்கத்தின் மேல்பகுதியில் அன்னவடிவில் படைப்புக்கடவுள் பிரம்மன்.
கீழே பாதாளத்தைத் தோண்டும் வராஹ முகத்துடன் திருமால். இதுவே லிங்கோத்பவரின் திருமேனி அமைப்பு பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் இடையே தங்களுக்குள் யார் பெரியவர் ? எனும் போட்டி எழுந்தது. அதற்கு முடிவு காண சிவபெருமானை நடுவராக்கி தீர்ப்பு கேட்டனர். முடிவு சொல்ல சிவன் ஒரு போட்டி வைத்தார்.
அதன்படி தான் விஸ்வரூபம் எடுப்பதாகவும், அந்த ரூபத்தின் தலை உச்சியை பிரம்மா சென்று காணவேண்டும். விஷ்ணு தன்னுடைய பாதங்களைக் காணவேண்டும். இருவரில் யார் முதலில் காண்பவரோ அவரே உங்கள் இருவரில் சிறந்தவர் என கூறினார். போட்டியாளர்கள் ஒப்புக்கொண்டனர். சிவன் விஸ்வரூபம் எடுத்தார்.
இப்படி எடுக்கப்பட்ட தோற்றத்தை விளக்குவதே லிங்கோத்பவர் சிற்பம். சிவன் ஜோதி சொரூபமானவன், பொன்னார் மேனியன் என்பதனை ,மெய்ப்பிப்பதே திருவண்ணாமலை. இமயத்தின் கயிலையிலும்; சென்னை மயிலையிலும் மையம் கொண்ட சிவனே, இங்கு மலையாகினான் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.
சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்த நிகழ்ச்சியினை வள்ளல்பெருமானார் என்னும் வடலூர் இராமலிங்க சுவாமிகள் “வான்காணா மறைகாணா மலரோன் காணான் மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான் நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும் அன்பர்தமைக் கலந்துகொள்ளும் அமலத் தேவே” என பரவசமாய்ப் பாடிச் சிறப்பித்தார்.
சிவனார் விஸ்வரூப தோற்றமெடுத்தது ஒரு இராத்திரி வேளையில். இதனாலேயே அன்றைய இராத்திரிக்கு ”மஹா சிவராத்திரி” என பெயர் பெற்றது. இது நடைபெற்ற கால அளவு அன்றைய இரவு 11.30 லிருந்து இரவு 1 மணிக்குள். இதனாலேயே இதனைப்போற்றி சிறப்பிக்கும் வகையில் முறையாக விரதமிருந்து, மாலை சூரியனின் மறைவிற்கும் மறுநாள் சூரிய உதயத்திற்கும் இடையில் ஐந்து காலங்களாகப் பிரித்து, அந்த நேரங்களில் சிவனுக்கு உகந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனையும் பக்தர்களால் வெகு விமரிசையாக செய்யப்படுகின்றன.
மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து லிங்க வடிவில் சிவபெருமானையும், அந்த இராத்திரிக்கு காரணமாக அமைந்த லிங்கோத்பவர் தோற்றத்தையும் பக்தி சிரத்தையுடன் வழிபட வேண்டும்.
இதனால் அகங்காரம் அழிவது, மனதில் தெளிவும் அமைதியும் நிறைவது, பாவவிமோசனம் கிட்டுவதுஅன்பு மேலோங்குவது, நினைத்த காரியம் சித்திப்பது, பகைவர்களை வெல்லும் ஆற்றல் பெருகுவது, இரத்தபந்த உறவுகளுடன் நல்லுறவு மேம்படுவது, நண்பர்களுடன் நல்லிணக்கம், மாசற்ற பண்பு, மங்காத செல்வம், மற்றும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் மங்கலம் பெருகுமென்பது ஆன்றோர் வாக்கு. ,
ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனையும், பல நூறுமுறை புனிதமான நதியாம் கங்கையில் நீராடிய பலனையும் புண்ணியத்தையும் தந்தருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சங்கிலித்தொடர்போல பின்னிப்பிணைந்து, சங்கடங்கள் தருகின்ற அனைத்தும் லிங்கோத்பவர் தரிசனத்தால் கதிரவனைக் கண்ட பனிபோல் விலகும். லிங்காஷ்டகம் மந்திரம் பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
