Home Uncategorized மார்கழி மாதம் 17ம் நாள்: திருப்பாவை – பாடல் 17

மார்கழி மாதம் 17ம் நாள்: திருப்பாவை – பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். 

பாடல் பொருள்:

ஆடையும் தண்ணீரையும் உணவையும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் நந்தகோபாலனே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடி போன்று இடைகளை கொண்ட பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! நீ எழ வேண்டும்! மகாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, 7 உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே! என்று கண்ணனை எழுப்புகிறார்கள். செம்மையான உனது பாதத்தில் பொற்கழலை அணிந்த செல்வனே, பலராமா நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்காமல் எழுந்திருப்பீர்களாக! பலராமன் கண்ணனுக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்து விட்டதால், கண்ணன் அவனிடம் பவ்யம் காட்டுகிறான். அதனால் பலராமனை கட்டி அணைத்து தூங்குகிறானாம். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்கும் அழகை அனுபவித்து ஆச்சர்யப்பட்டு மகிழ்கிறார்கள் கோபியர்கள்.

Exit mobile version