முதலமைச்சராக பதவியேற்ற முதன்முறையாக டெல்லி பயணம் – மோடியுடன், மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்க டெல்லிக்கு முதன்முறையாக செல்கிறார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.
டெல்லி பயணத்திற்காக சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார். டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற பின்னர், டெல்லியில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார்.
மேலும், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்கிறார்.
அதில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்துவார்.
சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது.
