பாண்டியநாட்டில் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகச்சிறந்த புலவர் ஒருவர் இருந்தார். இவரை நேரிடையாக அறிந்தவர்களைத் தவிர, இவரை அதுநாள்வரை கண்டிராதவர்கள்கூட இவரின் நுட்பமான புலமையைப் பற்றி நன்கறிந்திருந்தனர். அந்த அளவிற்கு பிரபலமான புலவர்!
ஒருநாள் நாட்டின் வேறுபகுதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒருசிலருடன் உரையாட நேர்ந்தது. பேசிக்கொள்ள ஆரம்பித்த கணத்திலேயே ”இவர்தான் தங்களால் புகழப்பட்டும் பிரபலமான புலவர்” என அறிந்து தங்கள் பெருமகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். புலவர் வயதால் சற்று அதிகமென்றாலும், அவரது தோற்றத்தில் இளமையே ததும்பியது. இதுகுறித்து”நரையும் மூப்பும் தங்களிடம் தென்படவில்லையே!” என ஆச்சரியத்துடன் கேட்டனர்.
அதற்கு புலவர் அளித்த பதில் என்ன?
”சிறந்த பண்புகள் நிறைந்த மனைவியும் பிள்ளைகளும், எனது எதிர்பார்ப்பை முன்கூட்டியே அறிந்து பணிசெய்யும் பணியாளர்கள், நல்ல அறச்செயல்களை மட்டுமே செய்யும் மன்னன், கல்வியில் சிறந்து, நற்பண்புகளுடன் விளங்கக்கூடிய சான்றோர் பெருமக்கள் ஆகியோர் எம்மை சூழ்ந்திருத்தல் ஆகியவற்றால் எனக்கு நரையும் மூப்பும் அணூகவேயில்லை” என்று தன் இளமைத்தோற்றத்தின் இரகசியத்தைப்பற்றி கூறினார்.
இதுகுறித்த புறநானூற்றுப்பாடல்:
”யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.”
அந்த புலவரின் பெயர் “பிராந்தையார்”. தன் வாழ்நாளில் ஒருமுறைகூட சந்தித்துக் கொள்ளாமலேயே சோழமன்னன் கோப்பெருஞ்சோழனின் நண்பராக விளங்கியவர். இந்த சோழனே தன் மகன்களின் தீயஎண்ணங்களால் வேதனையுற்று “வடக்கிருந்து உயிர் நீத்தல்” என்னும் அக்காலத்தைய மரபின்படிபின்படி உயிர் நீத்தான். அவனுடனேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தவர் இதே பிசிராந்தையார்!
ஒருவனுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மனைவி, பிள்ளைகள், கொடுங்கோல் ஆட்சியாளர்கள், கற்றிருந்தும் நற்பண்புகள் எதுவுமில்லாத கயவர்கள் போன்றோரால் வருகின்றன என்பது இன்றளவும் உண்மை!
போகிறபோக்கில் வாழ்க்கை பற்றிய உண்மையை தெள்ளத் தெளிவாக தெளித்துச்சென்ற புலவர் பிசிராந்தையார் பலே கில்லாடிதானே?!
