Home Uncategorized பேரருள் பொழியும் பேச்சியம்மன் – Pechi amman history

பேரருள் பொழியும் பேச்சியம்மன் – Pechi amman history

வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர்.

அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான்.

இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம் ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள். அவளிடம், ‘நான் இந்நாட்டின் அரசன். எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால், நிறைய பொன்னும் பொருளும் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண் மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.

அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப் படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட அந்தப் பெண்மணி, பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தாள். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.

அரசனையும், அவன் மனைவியையும் அழித்து, தங்களைக் காப்பாற்றியது ‘பெரியாச்சி’ என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர், அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு ‘பெரியாச்சியம்மன்’ என்ற பெயரிலேயே கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மன் என்பதே நாளடைவில் ‘பேச்சியம்மன்’ அல்லது “பேய்ச்சியம்மன்” என்றாகிப் பல இடங்களில் கோவில் கொண்டு விட்டார் என்பதாக கூறப்படுகிறது.

இது தவிர மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இளைய சகோதரன் ஒருவன் மட்டும் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைவிலிருந்த ஒரு ஊரைச் சென்றடைந்தான். அவனுக்கு அந்த ஊரிலிருந்த பேச்சி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் தொடர்ச்சியாக அவன், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இந்தத் திருமணத்திற்கு அந்த ஊரிலிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த தம்பதியரால் ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த காட்டுப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தனர். இந்நிலையில், தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற சகோதரனைத் தேடி, அவனுடைய மற்ற சகோதரர்கள் அந்த ஊருக்கு வந்தடைந்தனர். தம்பியைப் பற்றி விசாரித்தபோது, காட்டுப் பகுதியில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் மிகவும் கவலையடைந்த அவர்கள் காட்டுக்குள் வசிக்கும் தங்கம் சகோதரனைத் தேடிச் சென்றனர்.

அங்கு ஆடு மேய்க்கும் சிலர், அவர்களுடைய சகோதரனும், அவன் மனைவியும் காட்டுக்குள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தனர். அந்த இடத்திற்குச் சென்ற அவனது சகோதரர்கள், தங்கள் சகோதரனையும், கர்ப்பிணியான அவன் மனைவியையும் பார்த்தனர். பின்னர் சகோதரனை மட்டும், தங்களுடன் வந்துவிடும்படி அழைத்தனர். அவன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை விட்டு வர முடியாது என்று மறுக்க, கோபம் கொண்ட அவனுடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து அவனது மனைவியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொன்றுவிட்டனர். அவர்களைத் தடுக்கச் சென்ற சகோதரனும் கொல்லப்பட்டான்.

இதைக் கண்ட ஊர்க்காரர்கள், ‘கருவுற்ற பெண்ணைக் கொன்றதால் தங்கள் ஊருக்கு ஏதாவது தீயசெயல்கள் நடந்து விடக்கூடாதே’ என்று அச்சமடைந்தனர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் பேசி, அந்தப் பெண்ணுக்கு ஒரு கோவில் எழுப்பி வணங்கி வர முடிவெடுத்தனர். அந்த வழிபாடே பேச்சியம்மன் வழிபாடு என்று கூறப்படுகிறது. செவி வழிக் கதையாக இது உள்ளது.

”பேச்சியம்மன்” சற்று உக்கிரமான தோற்றமுடையவள். பாவகாரியங்களைச் செய்வோர், அல்லது அதற்கு உடந்தையாக இருப்போர் அனைவருக்கும் கடுமையான பாடம் கற்பிக்கும் தன்மை கொண்டவள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி வணங்கும் நபர்களை ஒருபோதும் ஏற்பதில்லை. இவள் பெரும்பாலும் தமிழகத்தின் பல சமூகத்தவராலும் வணங்கப்பட்டு வருகிறாள்.

மனித குலம் நாகரீகத்தில் தழைக்கத் தொடங்கியபோதே, தங்கள் வாழ்வியலை நெறிப்படுத்த தங்களிடையே வாழ்ந்து மறைந்த அபூர்வமான ஆன்மாக்களை வணங்கி வழிபட்டு, அவற்றின் துணையுடன் வளமும் நலமுமாக வாழ்ந்தனர். வேத, இதிகாச, புராணங்களிலும் இவற்றிற்கு கிளைச் செய்திகள் பரவியிருக்கின்றன.  

Exit mobile version