Home Uncategorized பங்குனி உத்திரம் – 2023

பங்குனி உத்திரம் – 2023

மாதங்களும் நட்சத்திரங்களும்: 2023 ஆண்டில் (தமிழாண்டு சுபகிருது பங்குனி 22- ஆம் நாள்) ஏப்ரல் – 5 ஆம் தேதி – புதன்கிழமையன்று வரும் பங்குனி உத்திரம் நாளின் சிறப்புகள் குறித்த பதிவு. தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. முதல் மாதமான சித்திரை மாதத்திலிருந்து பங்குனி மாதம் முடியும்வரை ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி திதியுடன் கூடி வரக்கூடிய நட்சத்திரங்கள் அனைத்துமே சிறப்பு அந்தஸ்தினை பெறுகின்றன.

அதிலும் பிற மாதங்களில் வரக்கூடிய நட்சத்திர நாட்களை விட, பங்குனி மாதத்தில் வரக்கூடிய “உத்ரம்” நட்சத்திரம் மகத்தானது. மாதங்களில் 12 வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களின் வரிசையில் 12 வது ”உத்ரம்” நட்சத்திரமாகும்.

பங்குனி மாத உத்திர நட்சத்திர சிறப்புகள்: சிவன் – பார்வதி, ஸ்ரீ ரங்கநாதர்- ஆண்டாள், பிரம்மா – சரஸ்வதி, முருகன் – தெய்வானை, தேவேந்திரன் – இந்திராணி, சந்திரன் – 27 நட்சத்திர கன்னியர், ஸ்ரீ ராமன் – சீதை , லெட்சுமணன் – ஊர்மிளா, பரதன் – மாண்டவி, சத்ருகன் – ஸ்ருத கீர்த்தி , ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றதும்

“காரைக்கால் அம்மையார்” சிவஜோதியுடன் முக்தி பெற்றதும், சாஸ்தா எனப்படும் ஐயனார் சுவாமியின் அவதாரம் நிகழ்ந்ததும், பங்குனி உத்திர நட்சத்திரம் நாளில்தான்.

ஆக, சனாதனத்தின் அனைத்துப்பிரிவுகளிலும் கொண்டாடப்படும் பிரதான கடவுளர்களுக்கும் விழா சம்பந்தமான நாளே பங்குனி உத்திர நட்சத்திரம் நாள். வழிபாடும் பலன்களும்: இந்த உத்திர நன்னாளில் அவரவர் வழிபடும் தெய்வங்களைப் பிரார்த்தனை செய்துகொண்டு, ஒருவேளை விரதம் இருந்து, மூல மந்திரங்களை ஜெபித்தும், திருக்கோயில்களில் நடைபெறும் தெய்வத் திருமணங்களை கண்குளிரக் கண்டும், மனமுருக வேண்டியும் வந்தால் தங்கள் வேண்டுதல் நிறைவேறப்பெறுவர்.

மேற்படி விரதமிருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்களாக தடங்கலாகவே இருந்து வந்த திருமண காரியம் நிச்சயம் நிறைவேறப்பெறுவர். தாம்பத்ய வாழ்க்கையைத் தொடரவும் முடியாமல், கைவிடவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் இன்றைய நாளில் மனமுருக விரதமிருந்து, சந்தித்துப் பேசினால் நிச்சயம் குழப்பங்கள் நீங்கப்பெற்று, வெற்றிகரமாக தாம்பத்ய வாழ்வினைத் தொடர இறையருள் கிட்டுமென்பது திண்ணம்.

இந்த நாளில் வசந்த காலத்தை வரவேற்பதோடு, தர்மகாரியங்கள் செய்வது சாலச்சிறந்தது. பெளர்ணமி திதியுடன் வரும் பங்குனி உத்திர நாளன்று மனதை முழுமையாக தெய்வத்திற்கு அர்ப்பணித்து, தெய்வங்களின் பேரருளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்.

Exit mobile version