Home Uncategorized ஸ்ரீ ராம நவமி – 2023

ஸ்ரீ ராம நவமி – 2023

ஸ்ரீ இராமன் பாரத தேசத்தின் மக்கள் எல்லோருடைய மனதிலும் இடம்பெற்ற ஆதர்ஷ புருஷன். இவருடைய பெருமைகள் அளவிட முடியாதது.

ஒரு இராஜ்யம் எப்படி செயல்பட வேண்டுமென உலகத்திற்கு எடுத்தியம்பிய இணையற்ற காவியம்.

இதன் கதாநாயகன் ஸ்ரீஇராமன் அவதரித்த நவமி திதி நன்னாளைப் போற்றுவதே நோக்கம். அவதாரப்பெருமை : பாற்கடலில் பள்ளிகொள்ளும் விஷ்ணுவெனும் திருமால் உலகத்தின் நன்மை கருதி, மாந்தரினம் வாழ வழிகாட்டிய பத்து அவதாரங்களுக்கான அரிச்சுவடியே “தசாவதாரம்” . இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ”டார்வின்” கோட்பாட்டின் படி, குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என ஒப்புக்கொண்டுள்ளது.

ஆயினும் உலகத்தின் ஜீவராசிகள் அனைத்தும் நீரிலிருந்து தோன்றியவையே என மறுபக்கம் எடுத்தியம்புகிறது. இவ்வகையில் விஷ்ணுவின் “தசாவதாரப் பெருமை” முழுமையான நவீன விஞ்ஞான கோட்பாடுகளுடன் ஒத்துப்போகிறது.

எப்படி ? அதாவது விஷ்ணுவின் முதல் அவதாரம் ”மச்ச அவதாரம்”. அதாவது மீன் அவதாரம். மீனானது தண்ணீரில் மட்டுமே ஜீவிக்கக் கூடியது. அடுத்ததாக “கூர்ம அவதாரம்”. கூர்மம் என்றால் ஆமை.

இந்த ஆமையானது நீரிலும் நிலத்திலும் ஜீவிக்கக்கூடியது. நிலத்தில் மட்டுமே ஜீவிக்கக்கூடிய, நிலத்தையே தன் பலத்தால் குடையக்கூடிய திறன்வாய்ந்த உயிரினமான “பன்றி”யாக எடுத்த அவதாரமே “வராஹ அவதாரம்” அடுத்த பரிணாமமாக ”நரசிம்ம அவதாரம்”. சிங்கமும் மனிதனும் இணைந்த மனிதன் பாதி; மிருகம் பாதி எனும் நிலை. இதற்கு அடுத்ததாக மகாபலி சக்ரவர்த்திக்கு அனுக்ரஹம் செய்த “வாமன அவதாரம்”.

இதுவே முழுமையான மானிட அவதாரம். “பரசுராம அவதாரம்” தாய்- தந்தை பக்திக்கு முன்னுதாரணம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்பதை நிலைநிறுத்தி, எளிய மக்களின் காவலான விளங்கிய பெருமைகொண்டது.

மூர்க்கத்தனத்தின் முன்னோடி. ஆனால், பாசத்தில் பகலவன். இதன்பின் மனித இனம் நல்லன – அல்லன என பகுத்தறிந்து, மேல்பருவமெய்தி, வாழ்வியல் நெறிகளை, அதைக்கடைபிடிக்கும் முறைகளை, தலைவனாய் மக்களை வழிநடத்த வேண்டிய முறைகளை வகுத்தளித்ததே பெருமைகள் மிகுந்த “ஸ்ரீ ராம அவதாரம்” . ”பலராம அவதார” மானது மனித இனம் விவசாயத்தை மேம்படுத்திய அவதாரமாகும்.

இதனால் தான் பலராமர் கையில் ஏர்க்கலப்பையுடன் விளங்கும் தோற்றம். ” பலராமர்” அவதாரத்தின்போதே உலக ஜீவராசிகளின் நலன் அரசியல் சார்ந்துதானென்றும், அதில் தர்மம் வாழ அதர்மம் அழிக்கப்படலாமென்ற அரசியல் நிலைப்பாட்டினை நுண்ணியலாக விளக்கியது ”கிருஷ்ணாவதாரம்”. தசாவதாரங்களில் இன்னும் ஒரு அவதாரம் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இது பூலோகத்தின் புனர்வாழ்வு குறித்தது.

நிச்சயம் காலம் பதில் சொல்லும். பெருமைக்குரிய குணங்கள்: இத்தனை அவதாரங்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு “இராம அவதாரம்” பெற்றுள்ளது . காரணம், ஒரு மனிதனின் பரிமாணங்கள் அனைத்திலும் மிகச்சிறந்த நிலையைக் கொண்டிருந்தவன் இராமபிரான் . தாய், தந்தை, குரு, சிவபக்தி , சிந்தையால் கெட்ட சிற்றன்னையிடமும் பணிவு, அரக்கர்களிடத்தும் காணப்பட்ட அரிய குணங்களை ஆராதிக்கும் மாண்பு, நட்புக்கும், தான் தந்த வாக்குறுதிக்கும், முக்கியத்துவம் தந்து அவற்றிற்காக தான் எதையும் இழக்கத் தயாராயிருந்த பாங்கு ஆகியன பிரமிக்க வைப்பவை. எல்லாவற்றிற்கும் மேலாக, ”கற்புநிலையென சொல்ல வந்தார் இருகட்சிக்கும் (ஆண்- பெண்)அதனை பொதுவில் வைப்போம்” என கலியுகத்தில் 20 ஆம் நூற்றாண்டில் பாரதி பாடியதை சில யுகங்களுக்கும் முன்னரே வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீ இராமபிரான். கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணர்- குசேலன் நட்பு மிகவும் பிரசித்தமானது.

அதேபோல் இராமாவதாரத்திலும் அவன் நட்புக்கு முக்கியத்துவம் தந்தவன். அந்த நண்பனின் பெயர் “அனந்தன்” . வசிஷ்டர் ஆசிரமத்தில்தான் ஸ்ரீ இராமபிரான் – அனந்தன் நட்பு ஏற்பட்டது. அனந்தன் பரம ஏழை. அதென்னவோ இராமனிடத்தில் அவனுக்கு அதீத பக்தி. குருவான வசிஷ்டருக்கு பணிவிடை செய்வதற்கு சற்றும் குறைவின்றி இராமபிரானுக்கு சேவை செய்தான்.

ஒரு கட்டத்தில் பிரிய நேரிட்டது. திடீர் பிரிவென்பதால் அனந்தனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ”இராமா…இராமா..” என கத்திக்கதறியபடி, இராமபிரானைத் தேடி காட்டுக்குள் அலைந்தான்.

ஒருகட்டத்தில் களைத்துப்போய் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தான். ஆயினும் “இராம” மந்திரத்தினை ஜெபிப்பதை நிறுத்தவேயில்லை. காலங்கள் உருண்டோடின. அயோத்தியில் நடைபெறவிருக்கும் “ஸ்ரீ இராம பட்டாபிஷேகம்” காண, சில முனிவர்கள் வனத்தின் வழியே சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக ஒரு புற்றின் மீது ஒரு முனிவரின் கால்பட்டதால் அது சரிந்தது. அப்போதும் “இராம..இராம” என ஒலிகேட்டது. உடனே அந்த முனிவர்கள் அதனை களைந்து பார்க்க, அங்கே ”அனந்தன்” தவக்கோலத்தில் காட்சிதந்தான்.

இராமபிரான் கையேயியால் வனவாசம் சென்றது முதல் நடைபெறவிருக்கும் பட்டாபிஷேகம் வரை எந்த நிகழ்வும் அனந்தனுக்குத் தெரியவே தெரியாது. அவன் மிகவும் வியந்து போனான். அவர்கள் கூறியதையெல்லாம் கேட்டு, ”இத்தனை ஆண்டுகளாக எனது இராமன் எப்படியெல்லாம் துன்பப்பட்டிருக்கிறான்.

நான் அவனுடனிருந்திருந்தால் இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்குமா?”என அழுது புலம்பினான். முனிவர்கள் அவனை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். பட்டாபிஷேகம்: அயோத்தியில் பட்டாபிஷேகத்திற்காக இராமபிரான் தன் மனைவி சீதை, தம்பியர், முனிவர் பெருமக்கள், அரசினர், அனுமன் ஆகியோரும் முன்னேறிக்கொண்டிருக்க, கூட்டத்தினர் வாழ்த்தொலிக்க, மங்கல வாத்தியம், மக்களின் வாழ்த்தொலி அனைத்தையும் கடந்து ,

“அடே… இராமா… ” என்கிற வார்த்தை ஒலித்தது. இராமன் திடுக்கிட்டு நின்றான். பலரும் ஆத்திரமுற்றனர். சபை ஸ்தம்பித்தது. குரல் வந்த திசையை அனைவரும் உற்று நோக்க- அங்கே மேலும் கூட்டத்தை விலக்கியபடி, மீண்டு வந்த அனந்தன், “அடே… இராமா…என்னை ஏனடா இப்படி கைவிட்டாய்… நீபட்ட துயரங்களைக்கேட்டு எவ்வளவு துன்பப்பட்டேன் .

தெரியுமா? ”என்று கதற, அவனுடன் வந்த முனிவர்கள் அனந்தன் இருந்த நிலையை விளக்கவும், இராமபிரானின் கண்கள் தானாக நீரைப்பொழிந்தன. சீதை சிலிர்த்துப்போனாள்.

லெட்சுமணன் கூட பதறிவிட்டான். அனுமன் கூட தன் பக்தி மிகவும் சாதாரணமென விம்மி நின்றான். ஆனாலும், கூடியிருந்த பிறருக்கு “அடே… ” என இராமனை ஒருமையில் அழைப்பதைமட்டும் சகிக்க இயலவில்லை.

அப்பொழுது இராமன் உரைத்தது: என்னை எல்லோரும் உயர்வாகப் பேசுவதே மரபாகிப்போனது. என் தந்தை தசரதர் மட்டுமே ஒரு சில நேரங்களில் மட்டுமே இப்படி அழைப்பார். தந்தை என்பவர் பாசத்தால் என்னை ஆதரித்தார். ஆனால் இந்த நண்பன் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் என்னை நேசிக்கிறான். இவனும் எனக்கு தந்தையைப்போன்றவன் என்று சொல்லி சமாதானப்படுத்தினான். அனைவரும் இராமபிரானின் கூற்றுகேட்டு, மெய்சிலிர்த்தனர்.

அனந்தனை கெளரவப்படுத்த முடிவு செய்து, தான் செய்யவிருப்பதை இராமன் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்தான். அதன்படி, பட்டாபிஷேகம் நடப்பதற்கும் முன், வேண்டாமென மறுத்தபோதும் அனந்தன தனதுஅரியாசனத்தில் அமரவைத்து, பணிந்து எழுந்து நின் றான் இராமன். அயோத்தி மட்டுமல்ல… வானுலகமும் வாழ்த்தியது.

இதனாலேயே இராமன் அனந்தராமன் என்கிற நாமத்தால் வணங்கப்படுகிறான். வளமான வாழ்வு: இப்படி, அரசநெறி, கற்புநெறி, நட்புநெறி என மானிடத்துப்பண்களை அனைத்தையும் தன் ஒரே அவதாரத்தில் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ இராமபிரான் அவதரித்தது ஒரு நவமி திதி.

இந்த திதியானது திதிகளுக்கெல்லாம் அரசன் போல . இந்த நாளில் ஸ்ரீ இராமனை வணங்கிப்போற்றுதல் என்பது நம்பிறவியின் பேறு. வளமான வாழ்வமைய அகிலத்தின் அரசனாம் ஸ்ரீ ராமனை வணங்கி மகிழ்வோம். – M.பழனிவாசன்.

Exit mobile version