பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் தனது முதல் கட்டப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாடுகள் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் தலைநகர் பிராட்டிஸ்லாவாவிற்கு (Bratislava) வந்தடைந்தார்.

கடந்த 1993 ஆம் ஆண்டில் ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதால், இந்த அரசு முறைப் பயணம் இரு நாட்டு உறவுகளில் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
பிராட்டிஸ்லாவா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமருக்கு, அந்நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி ரொட்டியும் உப்பும் வழங்கி அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அங்குள்ள கலைக் குழுவினரால் ‘வந்தே மாதரம்’ பாடலும் பாடப்பட்டது.

இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருக்கும் பிரதமர் மோடி, ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி மற்றும் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்; வர்த்தகம், முதலீடு, ஆட்டோமொபைல், ரயில்வே உற்பத்தி, ஏஐ (AI) மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், அந்நாட்டின் முக்கிய வணிகத் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

