அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டம்
உலகெங்கும் லிங்கவடிவில் அருள்பாலிக்கும் சிவபெருமான் குடுமியான்மலையிலும் எழுந்தருளினார். “குடுமியான்’ என்றால் “உயர்ந்தவன்’ என்றும், “குடுமி’ என்றால் “மலையுச்சி’ என்றும் பொருள்படும். உயர்ந்தமலையை ஒட்டி இவர் கோயில் கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.
இங்குள்ள இறைவனை “சிகாநாதர்’ என்கிறார்கள். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டான இக்கோயிலில் நுழைந்ததில் இருந்து கருவறை செல்லும் வரை எங்கும் சிலைமயம் தான். அனைத்து சிலைகளும் கலை நுட்பம் உடையவை என்பதால் மத்திய தொல்பொருள்துறை இக்கோயிலை தன்வசப்படுத்தியுள்ளது.
இக்கோயிலில் பணிபுரிந்த அர்ச்சகர் ,ஒருநாள் பூ கிடைக்க காலதாமதமானதால் இறைவனுக்கு பூ போட முடியவில்லை அரசர் முன்னறிவிப்பின்றி கோயிலுக்கு வந்துவிட்டார். பதட்டமடைந்த அவர், இனி பூத்தொடுத்து இறைவனுக்கு சூட்டுவதற்கு கால அவகாசமில்லை என்பதை உணர்ந்து, தன் மனைவியின் தலையிலுள்ள பூவை எடுத்து லிங்கத்திற்கு அவசரமாக சூட்டிவிட்டார்.
பூஜை முடிந்து அப்பூவை பிரசாதமாக அரசரிடம் அர்ச்சகர் கொடுத்தார். அதில் தலைமுடி இருந்தது. கோபமடைந்த அரசர் அதுபற்றி அர்ச்சகரிடம் விசாரிக்க, என்ன செய்வதென அறியாத அர்ச்சகர் “”இறைவா என்னைக் காப்பாற்று,” என மனதிற்குள் வேண்டினார்.
இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு, “”அரசே! லிங்கத்தின் தலையில் குடுமி இருக்கிறது. அதிலுள்ள முடி ஒட்டிக் கொண்டிருக்கிறது,” என்றார் அர்ச்சகர்.
இதை அரசர் நம்பவில்லை.””பொய் சொல்லாதே,” என கர்ஜித்தவர், லிங்கத்தின் அருகே சென்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! கருணைக்கடலான சிவனின் தலையில் ஒரு குடுமி இருந்தது. அரசர் ஆச்சரியப்பட்டார்.
அர்ச்சகரும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் தசாவதார சிலைகள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. சங்கீத வித்வான்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில் இது. பொதுவாக சிவாலயங்களில் துவார பாலகர்கள் கண்டிப்பான முகத்தோற்றத்துடன் கிழக்கு நோக்கி வாயில் காப்பார்கள். ஆனால், இங்கோ தெற்கும், வடக்குமாக நின்ற நிலையில் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் புன்னகை பூத்தநிலையிலும், மற்றொருவர் சற்றே கடுமையான முகத்தோடும் செதுக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு சனித் தலம் ஆகும். மலை உச்சியில் நாயன்மார்கள்: நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாத கோயில்.
புதுக் கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் ரோட்டில் 16 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது.
