பாரதம் எனப்படும் இந்தியதேசம் இன்று தனது பெருமைகளை முன்னெப்போதையும் விட பன்மடங்கு பாரினில் பரப்பி வருகிறது. ஆயினும், இதற்கான விதையூன்றப்பட்டது சங்கத்தமிழ்காலத்தில் என்பது திண்ணம்.
”சங்க இலக்கியங்கள்” என பகுக்கப்பட்டு, இன்று நம்மிடையே உலா வரும் இலக்கியப் பொக்கிஷங்கள் அனைத்தும் ”கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப் பட்டவையாகக்” கருதப்படுகிறது. ஆயினும் சமீப கால தொல்லியல் ஆய்வுகளின்படி இந்த காலத்தின் தொடக்கம் மேலும் முன்னோக்கிச் செல்கிறது. (இதுகுறித்து மேலும் நிரூபணப்படுத்தும் தகவல்கள் கிடைத்திடக்கூடுமென நம்புகிறோம்).
சரி… இதனை இப்போது கணக்கிடுவது எதற்காக ? காரணம் இருக்கிறது. வாருங்கள் பயணிப்போம்.
பொதுவாக பாரததேசத்தின் வரலாற்றினை குறிப்பிடும்போது ”ஒருதலைபட்சமான’ வரலாற்று எழுத்தாளர்கள், பன்னெடுங்காலமாக நமது புராண, இதிகாச காவியங்கள் தரும் அளப்பரிய செய்திகளை புறந்தள்ளி விட்டு, அவைகூறும் நிலக்குறிப்புகள், பெயர்கள், அறிவியல் செய்திகள், இலக்கியக் கூறுகள், கலாச்சார, பண்பாட்டியல் மற்றும் மொழிவளம் ஆகிய அனைத்தையும் “கட்டுக்கதைகள்” எனும் பேழையிலே வைத்துப் பூட்டிவிட்டு, அந்நியச் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து எழுதி வருகின்றனர். இதன் மூலம் நம்மைப்பற்றிய நமது புராதனச் செய்திகளை நம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் செய்து வருகின்றனர்.
இப்படித்தான் பின்வரும் கூற்று ஒன்று, சித்தரிக்கப்படுகிறது. அதாவது, பாரத தேசத்தின் எல்லைகளாக நாம் குறிப்பதை, ”இந்தியா என்பது சுதந்திரத்திற்குப் பின் கட்டாயத்தால் கட்டமைக்கப்பட்ட நாடு. இது ஒருங்கிணைந்து எப்போதும் இருந்ததில்லை. இதன் ஒரு பகுதி மக்களுக்கும் மற்றொரு பகுதி மக்களுக்கும் தொடர்பே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின்னரே இந்தியா என்பது வடிவமைக்கப்பட்டது” என்பர். ஆனால், இதில் எள் முனை அளவும் உண்மையில்லை என்பது அறிவார்ந்த பெருமக்களுக்கு நன்கு புரியும்.
நம் பாரததேசம் தொன்று தொட்டு பல்வேறு மொழிகளால், பல்வேறு பேரரசுகளால் பிரிந்திருந்தபோதும், சனாதன தர்மமென்னும் புராதன கலாச்சாரத்தால், வாழ்வியலால், கருத்தாக்கங்களால் ஒன்றுபட்டே இருந்து வந்துள்ளது. தற்போது மாநிலங்கள் என நாம் கொண்டாடுவதைப்போன்றே, அன்றும் பேரரசுகள், சிற்றரரசுகள் என கொண்டாடப்பட்டுள்ளது. பெண்கொடுத்து, பென்ணெடுக்கும் வழக்கமும் இருந்துவந்துள்ளது. இதன் மூலம் ஆங்காங்கே சமாதனம் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
மகாபாரதப்போருக்கும் முன்னர் அர்ஜுனனுக்கு மதுரையிலிருந்து பெண்கொடுக்கப்பட்டுள்ளார். மதுரை பாண்டியப்பேரரசின் சார்பில் மகாபாரதப் போருக்கு அர்ஜுனனுக்கு ஆதரவாக படை அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்புகளைக் காண்கிறோம். மேலும் தெற்கே சாளுக்கிய, கலிங்க, பல்லவ, சேர, சோழ, பாண்டியர் வம்சங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் தென்படுகின்றன. இவையெல்லாம் ஒரே கலாச்சாரமான சனாதன தர்மமென்னும் அடிப்படையிலேயும், அதன் தர்மநெறிகளுக்கு உட்பட்டே நிகழ்ந்துள்ளன.
இன்றைய பாரதத்தின் வடக்கெல்லையில் விளங்கும் இமயத்தில், ”கயிலை” எனப்படும் “கைலாச மலை” உள்ளது. இந்த இமயத்தைக் குறிக்கும் பல்வேறு செய்திகள் தமிழ் இலக்கியங்களில் பல்கிப் பரவியுள்ளன. இமயத்தில் கால்பதிப்பது, இமயத்தினை வெல்வது, இமயத்திலிருந்து மண், கல் எடுத்து வருதல் ஆகிய அனைத்தும் பெருமைப்படத்தக்க அம்சங்களாக கருதப்பட்டு வந்துள்ளது. அது இன்றும் தொடர்கிறது.
தமிழ் சைவசித்தாந்த இலக்கியங்களில், முழுமுதற்கடவுளான “சிவபெருமான்” குடிகொண்டிருக்கும் கயிலை மலையினையே முக்கியத்துவம் தந்து போற்றுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் “கயிலையைப் பாடாதோர்” என எவருமிலர். அவர்களில் காரைக்கால் அம்மையார் குறிப்பிடத் தகுந்தவர். இவர் கயிலையில் காலதனைப் பதிக்காமல் தலைகீழாய் செல்ல எத்தனித்தபோது, இறைவனால் “அம்மையே” என விளிக்கப்பட்டவர்.
சற்று எண்ணிப்பாருங்கள். இன்றைக்கும் சவாலாக இருக்கும் இமயத்தின் சூழ்நிலை, பன்னெடுங்காலத்திற்கும் முன்னர் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள். அத்தகையப் பகுதிக்கு, சர்வசாதாரணமாக எங்ஙனம் சென்றிருப்பர்? எப்படி படைகளை வழிநடத்தியிருப்பர்? ஆனால், அவர்களுக்கு எல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது. அதனால்தான் நமது இலக்கியங்களில் கிடைக்கும் குறிப்புகள் கூட இமயத்தினை மிகவும் போற்றுதலோடு, வருணிக்கின்றன.
அவ்வகையில், பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி குறித்து காரிகிழார் என்னும் புலவர் வாழ்த்தியலாகப் பாடிய, புறநானூற்றுப் பாடலொன்று (பாடல் 06) அரிய செய்தினை வழங்குகிறது. அதில்,
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
எனத்தொடர்கிறது அப்பாடல். .
அதாவது பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் புகழ் எப்படியெல்லாம் பரவ வேண்டுமென புலவர் ஆசைப்படுகிறார் தெரியுமா?
“வடக்கே உள்ள இமயமலையைத் தாண்டியும், தெற்கே குமரிமுனை தாண்டியும், கிழக்கில் தோண்டப்பட்டுள்ள கடலைத் தாண்டியும்,, மேற்கே பழமையான கடலைத்தாண்டியும்” (தாண்டியும்: ”அதற்கு அப்பால்” என பொருள் கொள்க.) மிகப்பழமையான புறநானூற்றுப்பாடலில், இன்றைய பாரதத்தின் தற்போதைய எல்லைகள் தெளிவாக குறிப்பிடப்படுவது எங்ஙனம்?
இது குறித்து தமிழ்தேசியம் பேசும் ஒருவரிடம் பேசியபோது, “ம்…அது…வந்து…. இந்தியா முழுக்க ஒருகாலத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள். பிறரின் படையெடுப்புகளால், நாம் தெற்கே விரட்டப்பட்டோம்” என விவரிக்கத் தொடங்கினார். அப்படியெனில் “கால்டுவெல்” கூற்றான “திராவிட மொழிக்குடும்பம்” என்பதன்படி, தமிழல்லாத பிற மொழிகள் தமிழிலிருந்து திரிபு ஆனவை என்கிறீர்கள். அப்படியெனில் ”திராவிடக்கூற்று பொய்தானே?” என வினவியபோது, அவரிடம் பதிலில்லை.
இதேபோல்தான், பாரத தேசத்தின் எல்லைகளை புலவர் காரிகிழார் குறிப்பிடுகையில், மிகச்சரியாக தற்போதைய எல்லைகளைத் தானே கூறியுள்ளார். எங்கேயும், அவர் திராவிடம் என்று குறிக்கவில்லை. ஒரு இடத்திலேனும் அந்நிய தேச எல்லைகள் என குறிக்கவில்லை.
தற்கால விஞ்ஞான வசதிகளை எட்டாமலிருந்த போதே, பண்பாட்டால், கலாச்சாரத்தால், உவமான, உவமேயங்ககளால், உருவகப்படுத்தும் செய்திகளால், வணங்கிய கடவுளர்களால், வழிபாட்டு முறைகளால், வெற்றி-தோல்விகளால், உறவு முறைகளால், தர்மநெறி கோட்பாடுகளால் பாரதம் என்பது ஒன்றுபட்டே இருந்திருக்கிறது. இங்கே போர்கள் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு பரந்துபட்ட நிலப்பரப்பில் நாமும் ஒரு அங்கம் என்னும் ஆத்மார்த்தமான சிந்தனை இங்கே உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. அதன் உச்சத்தில் சென்று பாடியக் கருத்துதான் புலவர் காரிகிழாரின் கருத்து.
தமிழ்கூறும் நல்லுலகம் மென்மேலும் இலக்கிய, புராண, இதிகாச செய்திகளை வெறும் மொழிவளமையை ஆய்வுசெய்வதற்காகவோ பக்திமார்க்கத்திற்காகவோ மட்டுமின்றி, புதிய சிந்தனை, புதிய முயற்சிகள் அடிப்படையில் யுகங்களைக் கடந்தும் ”பாரதம்” சிறந்த தேசம், எப்போதும் ஒன்றாகவே ”ஒரே தேசம்” என்றே விளங்கி வருகிறது என்பதை மேன்மேலும் நிறுவ வேண்டும்.
இதற்கு வழியமைத்து தந்திருக்கும் புறநானூற்று தமிழ்ப்புலவர் “காரிகிழார்” என்னும் ஞானக்கிழவனுக்கு நன்றி கூறுகிறேன்.
இன்னும் பல சங்ககால நூல்களிலும் பல்வேறு நிலைகளில், வழிகளில் பாரதத்தின் நிலப்பரப்பு சார்ந்த செய்திகள், கலாச்சார ரீதியிலான ஒற்றுமை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும், நன்கு கற்றுத்தேர்ந்த தமிழறிஞர்கள் இதையெல்லாம் கல்விவாயிலாக இல்லாவிட்டாலும், செய்திவாயிலாகவாவது வருங்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்காமல், தன் போக்கில் கண்டும் காணாமல் போவதுகூட ஒரு தேசதுரோகமே என்பதை உணர வேண்டும்.
வாழிய செந்தமிழ் ! வாழிய பாரதம் !
