Home உலகம் “புஷ்பகவிமானமும் தற்கால விஞ்ஞானமும்”-சிறப்பு கட்டுரை!

“புஷ்பகவிமானமும் தற்கால விஞ்ஞானமும்”-சிறப்பு கட்டுரை!

புஷ்பக விமானமும் தற்கால விஞ்ஞானமும்

மு.பழனிவாசன்

         ”இராமயணத்தில், இராவணன் இராமனின் மனைவி சீதையை ஒரு புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.

            இராவணனை வதம் செய்தபின் இராமபிரான் அயோத்தியை நோக்கி புஷ்பக விமானத்தில் தன் தம்பி லெஷ்மணருடன் பயணித்தார்.

            சீவக சிந்தாமணியில், கர்ப்பிணியாகிய அரசி விசையை (கருவில் சீவகன்) நயவஞ்சக அமைச்சரால் நாடு சூறையாடப்பட்டபோது, தச்சனின் உதவியால்  விசையை மயிலூர்தி ஒன்றில் தப்பித்து பயணிக்கிறாள். அவள் பறக்கும்போதே தன் கனவனின் இறப்பையும் அறிகிறாள்! (ஏற்கனவே மஹாபாரதத்தில் குருஷேத்திர போர்க்களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை திருதிராஷ்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனின் விளக்கத்தின் மூலம் அறிந்துகொண்டான். அந்த காலத்திலேயே நேரலை ஒளிபரப்பு!)   ஒரு சுடுகாட்டில் தரையிறங்கினாள். ”இப்படியெல்லாம் எத்தனையோ குறிப்புகள் புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள் அனைத்திலும் ஆங்காங்கே குறிப்புகளை நுனிப்புல் போல மேய்ந்ததுண்டு. அதன் விளைவே இக்கட்டுரை.

            வால்மீகி இராமாயணத்தில் விபீஷணன் ஒரு புஷ்பக விமானத்தை தந்து உதவுகிறான். அதுவும் எப்படி? “இராமா.. இதை மனதினால் கட்டுப்படுத்தி, அதன் மூலம் கட்டளைகள் பிறப்பித்து, எங்கும், எப்பொழுதும் விருப்பம் போல் பயணிக்கலாம்” என்று செய்திசொல்லி, அதில் இராமபிரானையும், அவர் தம்பி லெஷ்மணனையும் அனுப்பி வைக்கிறான் என்று சொல்லப்படுகிறது.

            இன்று இராமன் ஒரு கற்பனைக்கதாபாத்திரம், இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டினார் என்றால், அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்றெல்லாம் சில மாடல்கள் கூறுகின்றனர். பகுத்தறிவு என்னும் பெயரால் அவற்றை புறம்தள்ளுவதுடன் எள்ளி நகையாடுகின்றனர். ஆனால், நம் அந்நிய நாட்டவர்கள் நம் புராண, இதிகாசங்களை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிடாமல், திருவள்ளுவர் கூறிய

”எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு”

எனும் குறள் மொழிக்கேற்ப, தாங்கள் கேள்விப்படும் இந்திய வாழ்வியலை, இதன் கடந்தகால பெருமைகளையும், அறிவுசார் விஷயங்களையும் ஆழ்ந்து நோக்கி, அவற்றில் காணப்படும் உண்மைகளை அக்குவேறு ஆணிவேராக பிரித்துப்பார்த்து நவீனகால அறிவியல் உண்மைகளுடன் ஒத்துப்போகின்றனவா? இல்லையா? என்பதை தெள்ளத்தெளிவாக விவரித்து வருகிறார்கள்.

நம் புராதனகால சடங்குகள், சம்பிரதாயங்கள், மந்திரங்களின் ஒலிஅதிர்வுகள் ஏற்படுத்தும் நம் உடல், மனம், சுற்றுப்புறங்களில் ஏற்படும் அதிசயமான மாற்றங்கள், நம் முன்னோர்கள் அன்றாட வாழ்வியலில் கையாண்ட பழக்க வழக்கங்கள், வழிபாட்டு நெறிமுறைகள் அனைத்திலும் மறைபொருளாக விளங்கும் நன்மைகள், உண்மைகள் போன்ற அனைத்தையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்து வருகிறார்கள்.

அவ்வகையில் புஷ்பக விமானத்தின் செயல்பாடுகளைப்பற்றியும் ஆராய்ந்து விட்டார்கள் என்கிற செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 2013 ஆம் ஆண்டு மினசோட்டா பல்கலைக்கழகத்தில் இருந்து பின் ஹீஸ் அணி, டிம் பிரிக் மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் தனது குழுவுடன் விமான சிமுலேட்டரில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதில் விமான கைவினைப் பொருட்கள் பறக்க, ஏவியேட்டர்கள் தங்கள் மூளை தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது. இந்த திட்டத்தில் ஏழு விமானிகள் கொண்ட குழு தங்கள் சிந்தனை சக்தியை மட்டும் பயன்படுத்தி, ஏற்கனவே அனுபவம் இல்லாத சிலர் விமான ஸ்டுமிலேட்டரை கட்டுப்படுத்த முடிந்திருக்கிறதாம்.

டஜன் கணக்கான எலெக்ட்ரோடுகளைக் கொண்ட மூளை சிக்னல்களை கணினி கட்டளைகளாக மாற்றும் ஒரு அல்கரிதத்தை (வழிமுறை தொகுப்பு) தங்கள் ”ஹெல்மெட்” வழியாக அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்”விமான ஓட்டும் உரிமம்” பெறுவதற்கான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்ய போதுமான அளவிற்கு விமானத்தை கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

ஏற்கனவே சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ள “மயில் விசைப்பொறி” எனும் பறக்கக்கூடிய இயந்திரமானது தற்கால “ஹெலிஹாப்டர்” போன்ற தொழில்நுட்பத்துடன் ஒத்துப்போகும். அதாவது அரண்மனையின் உப்பரிகையிலிருந்து மேலெழும்பி, மிதமான வேகத்தில் பறந்து தேவைப்படும்  இடத்தில் இறங்கக்கூடிய நுட்பம் வாய்ந்ததாகவே கருதவேண்டியுள்ளது. 

இன்று நம் தமிழ்நாட்டில் வீதியோர உணவகங்கள் போல் முளைத்திருக்கும் பொறியியற் கல்லூரிகளின் மாணவ, மாணவியர் கொஞ்சமாவது இதைப்பற்றி அறிந்திருக்கின்றனரா? என்றால் நிச்சயமாக இல்லை என்பதே உண்மை! அறிவியல் துறையில் அன்றாடம் நடைபெற்றும் பரிணாம, பரிணாமங்களை மாணவர்களிடத்தில் ஆக்கப்பூர்வமாக கொண்டு சேர்க்கும் பணியில் கல்லூரிகளோ, பல்கலக்கழகங்களோ ஈடுபடுவதுபோல் தெரியவில்லை. யாரோ பாடத்திட்டங்களை தயாரிக்கிறார்கள். நாமும் ஏதோ சொல்லிக் கொடுக்கிறோம் என்கிற மனோபாவத்தில்தான் இருப்பதாகத் தெரிகிறது. ”இல்லை.. நாங்கள் அப்படிப்பட்டவர்களாக இல்லவே இல்லை” என்று ஒருபோதும் அவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்களின் மனோபாவம், ஆரிரியர்கள் தங்களின் கடமையாற்றும் விதம், இவற் றை கண்காணிக்க வேண்டிய அரசு செயல்படும் விதம்  எல்லாமே ஏதோ சடங்கு சம்பிரதாயங்களாகவே இருக்கின்றன.

கல்வி என்பது முதலில் மண்சார்ந்தும், தேசத்தின் பாரம்பரியம் சார்ந்தும், மதத்தினை மட்டும் சாராமல் மனத்தினைச் சார்ந்தும், இவை அனைத்திலும் தெளிவு பெற்று, உலகளவில் போட்டியிடக்கூடிய, எவ்விதமான மாச்சர்யங்களுமற்று, தாய்நாட்டுப் பற்றிலும் சிறந்தோங்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனதால்தான், இன்று அந்நியநாட்டவர்கள் நம் முன்னோர்கள் தந்த பொக்கிஷங்களையெல்லாம், இன்று அவர்களுடையதாக்கி கொள்கின்றனர். பன்னெடுங்காலமாக இதுதான் நிலைமை. “திரைக்கடலோடியும் திரவியம் தேடு” என்று நம் முன்னோரால் சொல்லப்பட்டதை மட்டும் வைத்துக் கொண்டு, அறிவுசார் விஷயங்களை கண்டும் காணாமல் விட்டுவிட்டோம். 

நம் சனாதன தர்மத்தின் கூறுகளில் முக்கியமான பல்வேறு கூறுகளில்,

ஆன்மாவின் ஆதிக்கம். அதாவது உயிருள்ள ஒரு உடலில் உள்ளுறையும் போது”மனம்”என்கிற ஒரு மாயக்கருவி இயக்குகிறது. அது மிகவும் துல்லியமானது. அந்த மனதிலிருந்து வெளிப்படும் எண்ணங்களின் ஆற்றல் எதையும் தன்வயப்படுத்தக் கூடியதாகும். அதன் ஆற்றலின் மூலம் சாதிக்க முடியாதவை ஏதுமில்லை. நம் ரிஷிகளும், ஞானிகளும் தங்கள் மனதைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் இறைவனையே தங்களுக்குள் கட்டிப் போட்டனர். பாண்டிய நாட்டில் இருந்த புலவர் பிசிராந்தையார் தான் அதுவரை ஒருமுறை கூட கண்டிராத சோழநாட்டு மன்னன் வடக்கிருந்து உயிர்துறக்கும் தருவாயில் வந்து சேர்ந்து தானும் அவனுடன் சேர்ந்து உயிர்துறந்ததும் மனதின் ஆற்றலால் விளைந்த ஒருங்கிணப்பால்தானே? இவ்விஞ்ஞான யுகத்தில் யூட்யூபில் எதையாவது பார்க்கத்தொடங்கினல், அதைத்தொடர்ந்து வரும் அடுத்தடுத்த காட்சிப்பதிவுகளும் கூட நம் மனதின் அலைகளால்தானே?

            அக்காலத்தில் சொல்லப்பட்ட ”மனம் போல் வாழ்வு, எண்ணம் போல் வாழ்வு, வைராக்கிய மனம், மனதால் ஆகாதது ஒன்றுமில்லை” போன்ற வரிகள், சொலவடைகள் அனைத்துமே விஞ்ஞானப்பூர்வமானவையே என்பதை அறிவியல் அரும்பாடுபட்டு அறிந்து கொண்டுவருகிறது. இப்படித்தான் இராமாயனத்தின் புஷ்பக விமானம், மஹாபாரதத்தில் நேரலை ஒளிபரப்பு, சீவக சிந்தாமணியின் மயில்பொறி, பாரதி கனவுகண்ட மொழிமாற்றுக்கருவி எல்லாம் மனதின் சக்தியால் ஆனவைதானே? இவற்றையெல்லாம் நாம் ஏன் காது கொடுத்து கேட்கவோ, பேசவோ மறுக்கிறார்கள்?

மேலைநாட்டினர் நம்முடைய இதிகாசங்கள், புராணங்கள், தொன்மை இலக்கியங்கள் அனைத்திலும் மறைபொருளாக உள்ள, மிகைப்படுத்தப்பட்டதாக நம்மால் கருதப்படும் அனைத்திலும் பொதிந்துள்ள அறிவியல் கூறுகளை ஆதாரப் பூர்வமாக வெளிப்படுத்திவருகிறார்கள் என்பதே உண்மை.

            இனியாவது நம் முன்னோர் கூறிவைத்த உவமான, உருவகங்களில் மறைபொருளாக விளங்கும் நற்செய்திகளை, மறைந்திருக்கும் அறிவியல் கூறுகளை இளைய தலைமுறையினர் உணர்ந்து, அறிந்துகொள்ளும் வண்ணம் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.      

Exit mobile version